சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து அதிமுக தலைவர்களான ஒபிஸ் மற்றும் இபிஎஸ் மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்து வருவது அதிமுகவினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பின்னர், ஒ.பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப்பேற்றார். ஆனால் பின்னர், சசிகலா முதல்வராகும் முயற்சியில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை எதிர்த்து ஒபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கினார். ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்ததையடுத்து அவர் சிறை செல்ல வேண்டியிருந்தது.
இதனால் முதல்வர் பதவி இபிஎஸ் வசமானது. பின்னர் சில மாதங்களிலே, சசிகலா சிறையில் இருக்கும்போதே, அவரை கட்சியிலிருந்து நீக்கிவிட்டு, ஒபிஎஸ் உடன் கைகோர்த்தார் இபிஎஸ். இதில் ஒபிஎஸ்க்கு துணை முதல்வர் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவி கிடைத்தது. இபிஎஸ் முதல்வர் பதவியை தக்கவைத்துக் கொண்டு இணை ஒருங்கிணைப்பாளர் ஆனார்.
2021 சட்டமன்ற தேர்தலில் முதல்வர் பதவிக்கு ஒபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இடையே போட்டி வந்து, இபிஎஸ் வெற்றி பெற்றார். ஆனால் தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவியது. இதனையடுத்து அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தோல்விக்கு யார் காரணம் என்ற பிரச்சனை எழுந்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில், சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா, அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்காமல் ஒதுங்கியே இருந்தார். பின்னர் தொண்டர்கள் அவரை அரசியல் ஈடுபடவும், அதிமுகவுக்கு தலைமையேற்கவும் சசிகலாவிடம் தொலைப்பேசியில் பேசி அழைப்பதாக ஆடியோ கிளிப்கள் வெளியானது. இதனையடுத்து சில நாட்களுக்கு முன்னர் சசிகலா அதிமுகவை மீட்போம் என தொண்டர்களுக்கு கடிதம் எழுதினார்.
உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவின் தோல்விக்குப்பிறகு சசிகலாவின் அரசியல் நிகழ்வுகள் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. சமீபத்தில் அதிமுக பொன்விழா ஆண்டையொட்டி ஜெயலலிதா, எம்ஜிஆர் மற்றும் அண்ணா சமாதிகளுக்கு சென்று மரியாதை செலுத்தினார் சசிகலா. எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா என பெயர் பொறித்த கல்வெட்டை திறந்து வைத்தார். இதன்மூலம் அதிமுகவில் இணையும் தனது விருப்பத்தை சசிகலா வெளிப்படுத்தி வருகிறார். ஆனால், அதிமுக தலைமை ஏற்பதாக இல்லை.
இந்நிலையில், இன்று (அக்டோபர் 25), கட்சியில் இரட்டை தலைமை குறித்த கேள்விக்கும், சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது பற்றிய கேள்விக்கும் பதிலளித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவெடுப்பார்கள் என்று கூறியுள்ளார். அதேநேரம், இரட்டை தலைமையின் கீழ் கழகம் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது, என்றும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஒபிஎஸ், இபிஎஸ் முடிவு செய்தால் சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து ஆலோசிக்கலாம். சசிகலாவை எதிர்த்து தான் ஒபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினார். அதை அவருக்கு நினைவுபடுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும், சசிகலாவுடன் அதிமுகவினர் எந்தவித தொடர்பும் வைக்க கூடாது என கூறியவர் ஓபிஎஸ்’, சசிகலாவை நீக்கியது பொதுக்குழுவை கூட்டி எடுக்கப்பட்ட முடிவு. சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
ஆனால் கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா அதிமுக கட்சியில் இல்லை, அவரைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை என கூறியிருந்தார்.
மேலும், சசிகலா மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம். அதிமுகவிற்கும் சசிகலாவிற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. அதிமுகவின் பொதுச்செயலாளர் என சசிகலா கூறிவதற்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம். அவருக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் கொடுப்போம். அவங்க சொல்வதை சொல்லிட்டு போறாங்க.. எங்களுக்கு என்ன பயம், என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இப்படி சசிகலா விஷயத்தில் அதிமுகவின் தலைவர்களே முரண்பாடான கருத்துக்களை தெரிவித்துள்ளதால் அதிமுக தொண்டர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.