/tamil-ie/media/media_files/uploads/2020/04/b650.jpg)
ஊரடங்கு காரணமாக தொழில் நிறுவனங்கள் மூடப்பட்ட காலம் முழுவதையும் சிறப்பு விடுமுறையாக அறிவிக்க முடியாது என தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, தொழில் நிறுவனங்கள் மூடப்பட்ட நாட்களை சிறப்பு விடுமுறை நாட்களாக அறிவிக்க கோரி வழக்கறிஞர் ரவீந்திரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
முதல்வர் பயணத்தின் போது, ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டதா? காவல்துறையின் பதில் என்ன?
இந்த வழக்கை நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல்குமார் அடங்கிய அமர்வு வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரித்தது.
அப்போது, தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் திருத்தச் சட்டத்தின்படி, சிறப்பு விடுமுறை என்பது ஒரு நாள் மட்டுமே அறிவிக்க முடியும் என்றும், இதுபோன்ற ஊரடங்கு காலத்தில் தொடர்ச்சியாக நிறுவனங்கள் மூடப்படும் போது, அத்தனை நாட்களையும் சிறப்பு விடுமுறையாக அறிவிக்க முடியாது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தமிழக அரசுக்கு எதிரான இந்த வழக்கில் மத்திய அரசு, தென்னிந்திய தொழிலாளர் சம்மேளனம், கோவையில் உள்ள கொடிசியா தலைவர் ஆகியோரை எதிர் மனுதாரர்களாக சேர்த்து, மே 28ம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.
உற்பத்தி துறையில் நாட்டில் முன்னணி மாநிலமாக உள்ள தமிழகத்தில், தொழிற்சாலைகள் திறம்படவும், லாபகரமாகவும் இயங்கினால் தான் மத்திய - மாநில அரசுகளின் வருமானம் பெருகும் என்றும் குறிப்பிட்ட நீதிபதிகள், 2005ம் ஆண்டின் பேரிடர் மேலாண்மை சட்டத்தில் உள்ள விதிகளை ஆராய்ந்து உரிய பதிலளிக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.