மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி கிடையாது : தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த நான்கு ஆண்டுகளாக பருவமழை பொய்த்துப் போனதால், விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மழை காலத்தில் வீணாக கடலில் கலக்கும் நீரை சேமித்து வைத்தால் இந்நிலையை தவிர்க்க முடியும் என்றும் கூறியிருந்தார்.
அதனால், தமிழகத்தில் பாயும் முக்கிய நதிகளான காவிரி, தென்பெண்ணை, பாலாறு, தாமிரபரணி நதிகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வலியுறுத்தி சென்னை சேப்பாக்கத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த அனுமதி கோரி சென்னை மாநகர காவல் ஆணையருக்கு அளித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகவும் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, சென்னை மெரினா கடற்கரையில் காவிரி பிரச்சனைக்காக ஒருநாள் போராட்டம் நடத்த அனுமதி வழங்கினார்.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, தொடர்ந்து வழக்கை விசாரித்தனர்.
இவ்வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, மெரினாவில் போராட்டம் நடத்துவதற்கு அனுமதிக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை ரத்து செய்தனர். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக தமிழக அரசு எடுத்த நடவடிக்கை சரியே என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.