கோவை பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் அமைந்துள்ள மேம்பாலத்தில் கோவையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி 4 இளைஞர்கள் சொகுசு காரில் சென்றனர்.
மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது காரின் முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி திடீரென பிரேக் பிடித்ததால் பின்னால் சென்ற சொகுசு கார் நிலை தடுமாறி லாரியின் மீது பலமாக மோதியது. மோதிய வேகத்தில் கார் உடனடியாக தீப்பற்ற தொடங்கியது. சுதாரித்துக் கொண்ட இளைஞர்கள் உடனடியாக காரில் இருந்து இறங்கி கிணத்துக்கடவு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் உடனடியாக வந்த தீயணைப்பு வாகனம் தண்ணீரை பீய்ச்சி அடித்து காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இருப்பினும் காரில் முற்றிலும் சேதமடைந்தது. இதையடுத்து செட்டிபாளையம் காவல் துறையினர் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி நிற்காமல் சென்ற லாரி மற்றும் ஓட்டுநரை சி.சி.டி.வி கேமரா உதவியுடன் தேடி வருகின்றனர்.
இளைஞர்கள் கோவையில் உள்ள டைட்டில் பார்க்கில் வேலை செய்து வருவதாகவும், வால்பாறைக்கு சுற்றுலா சென்ற போது விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர். மேம்பாலத்தில் கார் தீப்பற்றி எரிந்த சம்பவத்தால் கோவை- பொள்ளாச்சி மெயின் ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“