திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பக்கிரிபாளையம் புறவழிச்சாலையில் அந்தனூர் பகுதியில் அரசுபேருந்தும் டாடா சுமோ காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் பயணம் செய்த 7 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.
திருவண்ணாமலை வழியாக கிருஷ்ணகிரிக்கு நேற்று இரவு (அக்.23) காரில் 11 பேர் பயணம் செய்தனர். மறுபுறம் பெங்களூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து திண்டிவனம்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. செங்கம் புறவழிச்சாலை அந்தனூர் பகுதியில் பேருந்து வந்து கொண்டிருந்த போது அதிவேகமாக வந்த கார் பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் பயணித்த 11 நபர்களில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 4 பேர் செங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு காவல்துறையினர் உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில், உயிரிழந்த 7 பேரில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் உள்ளனர். உயிரிழந்தவர்களில் பின்மல் தீர்த், குஞ்சா ராய், டல்லு, நிக்கோலஸ் மற்றும் நாராயண் சேத்தி ஆகியோர் அசாமைச் சேர்ந்தவர்கள். மற்ற 2 பேர் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த டிரைவர் புனித்குமார் மற்றும் காமராஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் ஓசூர் அருகே உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து வந்துள்ளனர். ஆயுதபூஜை தினத்தன்று புதுச்சேரிக்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“