சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள குமரன் நகர் பகுதியில் இருந்த ஏடிஎம் ஒன்றில் ஸ்கிம்மர் கருவி பொருத்தப்பட்டிருப்பதைப் பார்த்த வங்கி ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நேற்று(சனிக்கிழமை) காலை மேற்கு மாம்பலம் கோவிந்தன் சாலையில் உள்ள கனரா வங்கியின் ஏடிஎம்மில் வங்கி ஊழியர்கள் பணம் போடுவதற்காக சென்றுள்ளனர். அப்போது, ஏடிஎம் கார்டு உள்ளிடும் பகுதியில் ஸ்கிம்மர் கருவியைப் பொருத்தப்பட்டிருப்பதைப் ஊழியர்கள் கண்டறிந்தனர். இதையடுத்து, வங்கி மேலாளர் உட்பட சில அதிகாரிகள் உடனடியாக அந்த ஏடிஎம்மிற்கு விரைந்து, அது ஸ்கிம்மர் தான் என்பதை உறுதி செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, அவர்கள் குமரன் நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, ஸ்கிம்மர் கருவியைப் பொருத்தியது யார் என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏடிஎம் இல் உள்ள சிசிடிவி கருவி வேலை செய்யாதது பற்றியும் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "கடந்த வாரத்தில் இந்த ஸ்கிம்மர் கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும். கடந்த முறை பணத்தை நிரப்பிய போது, வங்கி ஊழியர்கள் இதனை கண்டறியவில்லை. அருகில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களையும் நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம்.
இந்தக் கருவியின் மூலம், வாடிக்கையாளர்கள் தங்களது கார்டை ஏடிஎம்மில் தேய்த்து, நான்கு இலக்க எண்ணை டைப் செய்யும் போது, அந்த எண்ணை ஸ்கிம்மர் கருவி ஸ்கேன் செய்துவிடும். இந்த தகவலை அருகில் சிறிது தொலைவில் இருந்து அந்த நபர் பெற்றுவிட முடியும்.
ஆனால், இதுவரை வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாகவோ, அல்லது திருடு போனதாகவோ வாடிக்கையாளர்களிடம் இருந்து எந்தப் புகாரும் வங்கிக்கு வரவில்லை. இதனால், வாடிக்கையாளர்கள் தங்களது கடவுச் சொற்களை அடிக்கடி மாற்ற வேண்டும். இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்படுகிறது" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.