prabhakaran | தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மாவீரர் நாள் நிகழ்ச்சி நேற்று (நவ.27) நடைபெற்றது. இதில் தமிழ் தேசிய முதுபெரும் தலைவர் பழ. நெடுமாறன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அப்போது பிரபாகரன் மகள் துவாரகா என்பவரின் காணொலி வெளியிடப்பட்டது. இந்தக் காணொலியில் தோன்றிய துவாரகா சுமார் 10 நிமிடங்கள் வரை பேசினார்.
அப்போது அவர், “பல்வேறு சவால்கள், ஆபத்துக்களை தாண்டி நாங்கள் உங்கள் முன் பேசுகிறேன். நாம் சிங்களத்துக்கு எதிரானவர்கள் அல்ல. அரசியல் ரீதியாக தமிழீழ விடுதலைக்கு தொடர்ந்து பயணிப்போம்.
சிங்கள அரசு தனித்து நின்று போர் புரிய திராணி அற்றது. அங்கு, தற்போது சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை. சீர்கேடுகள் அரங்கேறி வருகின்றன” என்றார்.
தொடர்ந்து, “ஆயுத போராட்டம் முடிவுக்கு வந்தால் அரசியல் உரிமைகள் கிடைக்கும் என்றார்கள். ஆனால் அது கிடைக்கவில்லை. ஐநாவும் ஈழத் தமிழர்களுக்கு நீதி வழங்கவில்லை” என்றார்.
மேலும், தாய் தமிழ் உறவுகளுக்கு நன்றி தெரிவித்த துவாரகா, பாதைகள் மாறினாலும் நமது லட்சியம் மாறாது” என்றார். இந்த வீடியோவில் தோன்றியவர் பிரபாகரனின் மகளா? என திருமாவளவன் சந்தேகம் எழுப்பினார்.
இதற்கிடையில் பிரபல கார்டூனிஸ்ட் பாலா, “ஒருவேளை தலைவர் தேதகுவின் மகள் இவர் எனில் அதைவிட மகிழ்ச்சி வேறு இல்லை.
ஆனால் முகங்களின் ஒவ்வொரு பகுதியையும் கூர்ந்து ஆய்வு செய்யும் ஒரு கார்டூனிஸ்ட்டாக சொல்கிறேன்.. 200 சதவீதம் இரண்டு முகமும் ஒன்றல்ல” எனத் தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் நவம்பர் 27 ஆம் தேதி ஈழ விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“