ராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் மீது பதிவு செய்யப்பட்ட தேர்தல் விதிமீறல் வழக்கை மதுரை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க சார்பில் காதர் பாட்சா முத்துராமலிங்கம் போட்டியிட்டார். அப்போது, தேர்தல் விதிமுறைகளை மீறி அதிக வாகனங்களை பயன்படுத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதாக காதர் பாட்சா முத்துராமலிங்கம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, அவர்கள் மீது ராமநாதபுரம் காவல் நிலையத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி அண்ணாதுரை சார்பில் புகாரளிக்கப்பட்டது. அதனடிப்படையில், காதர் பாட்சா முத்துராமலிங்கம் உட்பட ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை ராமநாதபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் காதர் பாட்சா முத்துராமலிங்கம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சரவணன், இந்த வழக்கில் எந்த விதமான ஆதாரமும் இல்லை என்றும், விசாரணை நீதிமன்ற நீதிபதி இதனை சுட்டிக்காட்டியுள்ளதாகவும் வாதிட்டார். இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, காதர் பாட்சா முத்துராமலிங்கம் உள்ளிட்ட ஏழு பேர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.