ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் வெற்றிபெற்ற டி.டி.வி தினகரன் எம்.எல்.ஏ வாக செயல்பட தடை விதிக்கவும், தேர்தல் முடிவை ரத்து செய்ய கோரி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
இது தொடர்பாக சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ராமமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், கடந்த மாதம் ( டிசம்பர் ) சென்னை ஆர்.கே. நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக டி.டி.வி தினகரன் போட்டியிட்டு 40 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம், மற்றும் பரிசுப் பொருள்கள் வழங்கியுள்ளனர். மேலும் டிசம்பர் 18 ஆம் தேதி வாக்காளர்களுக்கு அளிக்கப்படவிருந்த 30 லட்சம் ரூபாய் பணத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் பல்வேறு தேர்தல் நடத்தை விதிமுறைகளும் இந்த தேர்தலில் மீறப்பட்டது. டிசம்பர் 17 ஆம் தேதி வாக்காளர்களுக்கு பணம் வழங்க முயன்றதாக 10 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 13 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யபட்டுள்ளது. ஆனால் தொகுதி தேர்தல் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதில் இருந்து வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம் வழங்கபட்டு இந்த வெற்றி பெறப்பட்டுள்ளது. இனவே தேர்தல் விதிமுறையை மீற பெறப்பட்ட இந்த முடிவை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும். வழக்கு முடியும் வரை ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ வாக செயல்பட தடை விதிக்க வேண்டும். இது தொடர்பாக கடந்த மாதம் 29 ஆம் தேதி தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டது. ஆனால் இதுவரை அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதரார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தினகரன் ஆட்கள் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்துள்ளார். லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து அவரின் சின்னமான குக்கர் சின்னத்தை விளம்பரம் செய்துள்ளார். இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு எதிரானது. எனவே தேர்தல் முடிவை நிறுத்திவைக்க வேண்டும் என வாதிட்டார்.
விசாரணைக்கு பிறகு உத்தரவிட்ட நீதிபதிகள், தேர்தல் முடிவுற்ற நிலையில், தேர்தல் வழக்காக தான் தாக்கல் செய்ய முடியும், பொது நல மனுவாக விசாரணைக்கு உகந்தது அல்ல என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.