ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினராக, டிடிவி.தினகரன் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி சென்னை உயர் நீதி மன்றத்தில் வக்கீல் எஸ்.வி.ராமமூர்த்தி வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மரணம் அடைந்தார். அதையடுத்து அவர் வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த ஆண்டு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முயன்றது. ஆனால், தொகுதிக்குள் வாக்களர்களுக்கு பணம் கொடுப்பதாக புகார் எழுந்ததை எடுத்து தேர்தல் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவின் பேரில் டிசம்பர் 21ம் தேதி ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடந்தது.
இந்த தேர்தலில் டிடிவி.தினகரன் சுயேட்சையாக போட்டியிட்டார். அதிமுக சார்பில் மதுசூதணனும், திமுக சார்பில் மருதகணேஷும் போட்டியிட்டனர். தேர்தலில் டிடிவி.தினகரன் சுமார் 80 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வானார். டிடிவி.தினகரன் தேர்தலில் வெற்றி பெற, ஹவாலா முறையில் ரூ.20 நோட்டை கொடுத்து, வெற்றி பெற்றதும் ஓட்டுக்கு 10,000 ரூபாய் தருவதாக சொன்னதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வக்கீல் எஸ்.வி.ராமமூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில், ‘’ஆர்.கே நகரில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளரான டி.டி.வி தினகரன், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல் வெற்றி பெற்றிருக்க முடியாது எனவும் குக்கர் சின்னம் ஒதுக்கிய பிறகு ஆர்.கே.நகரில் அதிக அளவில் குக்கர்கள் கிடைக்கப்பெற்றுள்ளது என கூறியுள்ளார். மேலும் ஆர்.கே நகரில் 30 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. எனவே தினகரன் வெற்றி பெற்றது செல்லாது என தீர்பளிக்கக் கோரியும் தினகரன் சட்டபேரவைக்கு செல்ல தடை விதிக்க வேண்டும்’’ என கேட்டுக் கொண்டுள்ளார்.
வழக்கறிஞர் எஸ்.வி.ராமமூர்த்தி தொடர்ந்த இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று முதல் வழக்காக விசாரிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.