Case filed against Aadhar linked with EB connection at Chennai High Court, மின் இணைப்புடன் ஆதார் இணைப்புக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு; வியாழக்கிழமை விசாரணை | Indian Express Tamil

மின் இணைப்புடன் ஆதார் இணைப்புக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு; வியாழக்கிழமை விசாரணை

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு அறிவிப்புக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு; வியாழக்கிழமை விசாரணை

New website address for Aadhaar electricity number link has been announced

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழ்நாடு  மின்சார வாரியம் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க அறிவுறுத்தியுள்ளது. இதற்கு சில தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிலர் அதில் சந்தேகங்களை எழுப்பினர். இருப்பினும் மின்சார வாரியம் பொதுமக்களின் சந்தேகங்களை தீர்த்து, ஆதாரை இணைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இதையும் படியுங்கள்: ‘சாலை விதிகளை மீறுபவர்களின் வீடியோவை அனுப்புங்க’; போக்குவரத்து காவல்துறை

தமிழகத்தை பொறுத்தவரை 2.36 கோடி மின் பயனாளிகள் உள்ளனர். இதுதவிர, 21 லட்சம் விவசாய இணைப்புகள், கைத்தறி, விசைத்தறி தொழிலாளிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் வீட்டு உபயோக மின்சார பயன்பாட்டிற்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்த மானியங்களைப் பெற ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க தமிழக மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இந்தப் பணிகள் தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு அறிவிப்புக்கு எதிராக தேசிய மக்கள் கட்சித் தலைவரும் வழக்கறிஞருமான ரவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பு விவகாரத்தில், வீட்டு உரிமையாளரின் ஆதார் எண் தான் இணைக்கப்பட வேண்டும். வாடகைக்கு இருப்பவர்களின் எண்ணை இணைத்தால் அவர்கள் காலிசெய்யும் போது பிரச்னை ஏற்படும். அதுபோல, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி வற்புறுத்தக்கூடாது, இதுகுறித்த தமிழக அரசின் ஆணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரதன் சக்கரவர்த்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கை ஏற்று விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Case filed against aadhar linked with eb connection at chennai high court