தமிழ்நாடு பா.ஜ.க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச். ராஜா மீது சென்னை விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான அமரன் திரைப்படம், மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இப்படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஆகியோர் பிரதான பாத்திரத்தில் நடித்திருந்தனர். இதனிடையே, அமரன் திரைப்படம் வெறுப்பின் விதைப்பு என்றும் வரலாற்று திரிப்பு என்றும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், ஜவாஹிருல்லாவின் கருத்துக்கு ஹெச். ராஜா கடும் எதிர்வினையாற்றியிருந்தார். கடந்த நவம்பர் 7-ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஹெச். ராஜா கலந்து கொண்டார். அவர் கூறுகையில், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் தேச துரோகிகள் என்றும், இவர்களை அரசு கண்காணிப்பில் வைக்க வேண்டுமெனவும் கூறினார். மேலும், அமரன் திரைப்படத்தை எதிர்ப்பதாகக் கூறி இவர்கள் தேச துரோகத்தை பரப்புவதாக இருந்தால், நாட்டை நேசிப்பவர்கள் அவர்களுக்கு எதிராக இருக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதனிடைப்படையில், ஹெச். ராஜாவின் பேச்சு அவதூறு பரப்பும் வகையில் இருப்பதாகக் கூறி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் போலீசாரிடம் புகாரளிக்கப்பட்டது. மேலும், மக்கள் இடையேயுள்ள ஒற்றுமையை குலைக்கும் வகையில் ஹெச். ராஜா பேசி வருவதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புகாரின் பேரில், ஹெச். ராஜா மீது சென்னை விமான நிலைய போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். கலவரத்தை உருவாக்கும் விதமாக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“