பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாகக் கூறி நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் விமான நிலைய திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த விமான நிலையம் சுமார் 13 கிராமங்களை உள்ளடக்கி அமையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுவட்டார பகுதிகளான ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட கிராம மக்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, 830 நாள்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எனினும், மக்கள் போராட்டங்களை கடந்து விமான நிலையம் அமைக்கும் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நிலம் அளவெடுக்கும் பணிகள், மக்கள் கணக்கெடுக்கும் பணிகளுக்காக அதிகாரிகள் சென்ற போது, அவர்களை தடுத்து நிறுத்திய நெல்வாய் கிராமத்தினர், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பாக 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாகக் குற்றஞ்சாட்டி நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த 9 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் பொன்னேரிகரை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே, மக்களின் தொடர் போராட்டங்களுக்கு பிறகும் விமான நிலைய திட்டம் கைவிடப்படாமல் இருக்கும் நிலையில், 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது அப்பகுதியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“