/indian-express-tamil/media/media_files/2025/08/27/tvk-vijay-compl-2025-08-27-08-16-21.jpg)
விஜய் மீது வழக்குப்பதிவு: த.வெ.க மாநாட்டில் பவுன்சரால் தூக்கி வீசப்பட்ட தொண்டர் பரபரப்பு புகார்
மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் (த.வெ.க) மாநாட்டில் பவுன்சரால் தூக்கி வீசப்பட்டதாகக் கூறப்படும் தொண்டர், தனது தாயுடன் சென்று அளித்த புகாரின் அடிப்படையில், த.வெ.க. தலைவர் விஜய் உட்பட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் பாரபத்தி கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு கடந்த 21.08.2025 அன்று நடைபெற்றது. சுமார் 216 மீட்டர் நீளம், 60 அடி அகலத்தில் மாநாட்டு மேடை அமைக்கப்பட்டு அக்கட்சி நிர்வாகிகள், முன்னணி தலைவர்கள் அமர்வதற்கு 200 இருக்கைகள் போடப்பட்டுள்ளன. சுமார் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்றனர்.
அப்போது நடைமேடையில் நடந்து வந்த விஜய், தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார். ஆர்வமிகுதியால் ஒரு தொண்டர் மேடையில் ஏறி விஜய் அருகில் செல்ல முயன்றபோது, பாதுகாப்புப் பணியில் இருந்த பவுன்சர் ஒருவர் அவரை குண்டுக்கட்டாகத் தூக்கி வீசினார். இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வெளியாகி வைரலானது.
பவுன்சரால் தூக்கி வீசப்பட்டவர், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பெரியம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த 20 வயதான சரத் குமார் என்பது தெரியவந்தது. இதுகுறித்து சரத்குமாரின் தாய் சந்தோஷ் கூறுகையில், "திருச்சி நேர்முகத் தேர்வுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு, விஜய் மீதுள்ள ஆர்வத்தால் மதுரை மாநாட்டுக்கு என் மகன் சென்றான். அங்கு அவனைப் பாதுகாப்பாளர்கள் தூக்கி வீசியதால், கை கால் ஒடிந்து அல்லது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருந்தால் யார் பதில் சொல்வார்கள்?" என்று ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பினார். மேலும், பாதுகாவலர்கள் அவ்வாறு தூக்கி வீசும்போது அதைப் பார்த்துக்கொண்டிருந்த விஜய், தடுக்க முயற்சித்திருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தச் சம்பவம் குறித்து பவுன்சர்கள் மீது பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்போவதாக சரத்குமார் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதன்படி, பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தாயுடன் சென்ற சரத்குமார், நேரடியாக மாவட்ட எஸ்.பி.யைச் சந்தித்து புகார் அளித்தார்.
சரத்குமார் அளித்த புகாரின் அடிப்படையில், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் காவல் நிலையத்தில் விஜய் உட்பட 10 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. பவுன்சர்கள் தன்னைத் தாக்கியதில் உள்காயம் ஏற்பட்டதாகவும், அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற இருப்பதாகவும் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.