திருச்செந்தூர் மயில் சிலை : திருச்செந்தூர் முருகன் கோயிலில் புகழ் பெற்ற மயில் சிலை திருடப்பட்டு அதற்கு பதில் போலி மயில் சிலை நிறுவப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயில் கருவறையில் பழங்கால பாரம்பரிய மயில் சிலை இடம்பெற்றிருக்கும். கோயிலுக்கு வரும் பக்தர்கள் தவறாமல் அந்த சிலை தொட்டு வணங்கி செல்வது வழக்கம். இந்நிலையில் அந்த பழங்கால மயில் திருடப்பட்டு அதற்கு பதில் போலி சிலை நிறுவப்பட்டது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு மயில் சிலையை கோயில் பணியாளர்களே யாருக்கும் தெரியாமல் பெயர்த்தெடுத்து அதற்கு பதில் அதைப்போலவே போலி மயில் சிலையை அங்கு நிறுவியுள்ளனர். இந்த தகவல் கோயில் நிர்வாகம் மூலம் பரவ தொடங்கிய பின்பு, அவர்களே மீண்டும் நிஜ மயில் சிலையை அதே இடத்தில் வைத்துள்ளனர். அப்போது அந்த சிலையின் தலை சேதம் அடைந்திருக்கிறது.
கோயில் பணியாளர்களே சிலை மாற்றிய விவகாரம் அப்படியே மூடி மறைக்கப்பட்டுள்ளது. இருந்த போது இந்த உண்மை தெரிந்த சிலர் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி பொன்.மாணிக்கவேல் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.
அப்போது சிசிடிவி காட்சிகள் மறைக்கப்பட்டு சிலை மாற்றப்பட்ட விவகாரம் கண்டுப்பிடிக்கப்பட்டது. உடனே இந்த விவகாரம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி, சூப்பிரண்டு பத்மநாதன், திருமேணி காவல் பணியாளர்கள் சுவாமிநாதன், ராஜகுமார், சுரேஷ் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலி சிலை நிறுவி ஏமாற்றும் பணியில் அறநிலையத்துறை அதிகாரிகளே துணை போய் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.