நடிகர் சூர்யாவை தாக்கினால் ரூ.1 லட்சம் பரிசு என்று அறிவித்த பாமக மாவட்ட செயலாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா நடித்து தயாரித்த ஜெய் பீம் திரைப்படம் சமீபத்தில் ஒடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப்படத்தை ஞானவேல் இயக்கியிருந்தார். ஜெய்பீம் திரைப்படம் விமர்சகர்கள், திரைத்துறையினர் மற்றும் பல்வேறு தரப்பினரிடையை நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த திரைப்படம் கடலூர் பகுதியில் நடைப்பெற்ற உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டிருந்து. மேலும், இந்தப்படம் உலக அளவில் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறது.
இந்தநிலையில், இந்த திரைப்படம் குறிப்பிட்ட சமூகத்தை இழிவு படுத்துவதாக கூறி, இப்படத்திற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஜெய்பீம் திரைப்படத்தில் உண்மையான குற்றவாளி கதாபாத்திரத்துக்கு வைத்திருந்த பெயர் மற்றும் குற்றவாளி கதாபாத்திரத்தின் பின்பக்கம் வன்னியர்களின் அடையாளம் இடம்பெற்றது போன்றவை தொடர்பாக சர்ச்சை எழுந்தது. உடனடியாக வன்னியர்களின் அடையாளம் மாற்றப்பட்டது. எனினும், இந்த விவகாரம் தொடர்பாக பாமக சார்பில் நடிகர் சூர்யாவுக்கு எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மேலும் சூர்யா 5 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என வன்னியர் சங்கம் சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே செய்தியாளர்களைச் சந்தித்த மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர், “ஜாதி கலவரத்தை தூண்டும் வகையிலும், வன்னிய சமுதாய மக்களை இழிவுபடுத்திய நடிகர் சூர்யா மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்தால் அவரை தாக்கும் இளைஞர்களுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு அளிக்கப்படும். சூர்யாவின் எந்த படத்தையும் இந்த மாவட்டத்தில் திரையிடுவதற்கு பாமக அனுமதிக்காது” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் நடிகர் சூர்யாவை தாக்கினால் ரூ.1 லட்சம் பரிசு அறிவித்த பாமக மாவட்ட செயலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் மீது 5 பிரிவுகள் கொண்ட பிரிவுகளில் மயிலாடுதுறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil