ஸ்டெர்லைட் எதிரான போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் பலரும் பாதிக்கப்பட்டனர். போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 12 பேர் மற்றும் தடியடியில் ஒருவர் பலியானார்கள். மேலும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களில் குடும்பத்தினரை சந்திக்க பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தூத்துக்குடி சென்றனர். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர், மதிமுக தலைவர் வைகோ, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் கே. பாலகிருஷ்ணன் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் என 6 அரசியல் தலைவர்கள் மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்தனர்.
144 தடையை மீறி பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்குச் சென்று சந்தித்ததால் 6 பேர் மீதும் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 143, 153(எ) மற்றும் 188 ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேமுதிக மகளிர் அணித் தலைவர் பிரேம லதா மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தலைவர் டிடிவி. தினகரன் ஆகியோர் இன்று தூத்துக்குடி மருத்துவமனைக்கு வந்து பாதிக்கப்பட்டோரை சந்திக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.