தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மீது சுங்கச்சாவடி ஊழியர்களை தாக்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் இன்று(மார்ச்.26) காலையில் சென்னை நோக்கி காரில் வந்து கொண்டிருந்த போது, காஞ்சிபுரம் மதுராந்தகம் அருகேயுள்ள தொழுப்பேடு சுங்கச் சாவடியில் வேல்முருகன் காருக்கு சுங்கக் கட்டணம் செலுத்தக்கோரி சுங்கச்சாவடி ஊழியர்கள் கேட்டுள்ளனர். ஆனால் இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் செல்வதற்குக் கட்டணம் செலுத்தியுள்ளதாகக் கூறி, அதற்கான சான்றைக் காட்டியுள்ளார். ஆனால் சுங்கச்சாவடியில் பணிபுரிந்த வடநாட்டு ஊழியர்களுக்கு தமிழ் படிக்க தெரியாததால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் கார் ஓட்டுநர் பாஸ்கரையும், காரையும் சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் வேல்முருகன் உடனடியாக சுங்கச் சாவடி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டார். அந்த சமயத்தில் சுங்கச்சாவடி ஊழியர்கள் சிலர் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதனால் சில மணி நேரங்களுக்கு சுங்கக் கட்டணம் செலுத்தாமலேயே வாகனங்கள் சென்றுள்ளன.
இந்நிலையில், ஊழியர்களை தனது காலணியால் வேல்முருகன் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, அச்சிறுப்பாக்கம் காவல் நிலையத்தில் வேல்முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் மக்களவைத் தேர்தலில், திமுகவிற்கு வேல்முருகன் ஆதரவு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.