அதிமுக கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு உட்கட்சி தேர்தல் நாளை நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மறுநாளான 8ஆம் தேதி காலை 10 மணி முதல் 5 மணி வரை நடைபெறும் எனவும், தேர்தல் முடிவுகள் அன்று மாலையே வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு வேட்புமனு தாக்கல் செய்ய டிசம்பர் 4ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால், இந்த பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தவர்கள் விரட்டியடிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யவே இத்தகைய சம்பவங்களில் அதிமுகவினர் ஈடுபடுவதாக கூறப்பட்டது.
இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதிமுக உறுப்பினரான ஜெயசந்திரன் மனு தாக்கல் செய்யப்பட இருப்பதாகவும், தேர்தல் நாளை நடைபெறவுள்ளதால் அதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென அவரது வழக்கறிஞர் பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வரநாத் பண்டாரியிடம், முறையீடு செய்தார்.
அதற்கு பதிலளித்த நீதிபதி, மனுவே தாக்கல் செய்யாத நிலையில் அதை எப்படி விசாரணைக்கு எப்படி எடுக்க முடியும. மனு தாக்கல் செய்து பதிவு நடைமுறைகள் முழுமையாக முடிந்தால் வழக்கை விசாரிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என திட்டவட்டமாக தெரிவித்தார்.
முன்னதாக முன்னாள் எம்.பி கே. சி. பழனிசாமி, அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு தடை கோரி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 'கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பழனிசாமிக்கு வழக்கு தொடர அடிப்படை உரிமை இல்லை என்று வழக்கை தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil