தமிழக அரசுத்துறைகளுக்கு இணையத்தின் வாயிலாக ‘தகவல் பெறும்உரிமைசட்ட’ மனுக்களை அனுப்ப வழிவகை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலமாக தகவல் பெறும் உரிமைசட்ட (2005) மனுக்களை அனுப்பி தகவல் கேட்டுப்பெற வழிவகை (Online RTI Portal) செய்ய உத்தரவிடுமாறு தமிழக அரசுக்கு எதிராக உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. திருச்சியை சேர்ந்த மருத்துவ மாணவர், முகமது காதர் மீரான் சார்பாக , வழக்கறிஞர் பாத்திமா சுல்தானா தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி சத்யநாராயணன் மற்றும் சேஷாசாயி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வெற்றிகரமாக செயல்பட்டு வரும் மத்திய அரசு மற்றும் மகாராஷ்டிரா மாநில அரசுகளின் online RTI போர்ட்டலை குறிப்பிட்டு, இத்தகைய வசதியை தமிழக அரசும் ஏற்படுத்தினால், அது அஞ்சல் தாமதம் மற்றும் அஞ்சல் செலவுகளை குறைப்பதுடன், பொது தகவல் அலுவலர்களின் வேலைப்பளுவையும் குறைக்கும் என்றும், மேலும் அது திறமையான மற்றும் வெளிப்படையான நிர்வாகத்திற்கு வழிவகுக்கும் எனவும் வழக்கின் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தகவல் பெறும் உரிமைசட்டம் (2005)இன் படி, ஒவ்வொரு அரசுத்துறையும் , அத்துறையின் நிர்வாக அமைப்பு , பணியாளர்களின் எண்ணிக்கை, துறை ரீதியான பணிகள், துறை அலுவலர்களின் அதிகாரங்கள் மற்றும் பணிகள், துறை சார்ந்த முடிவுகளை எடுக்கும்போது பின்பற்றக்கூடிய நடைமுறைகள், தம்வசமுள்ள ஆவணங்களின் வகைகள் உள்ளிட்ட இன்னபிற, தாமாக முன்வந்து வெளியிடும் தகவல்கள் (Pro-active disclosure) ஐ வெளியிட வேண்டும். தகவல் பெறும் உரிமைச்சட்டம் நடைமுறைக்கு வந்த நாளிலிருந்து 120 நாட்களுக்குள் அவற்றை வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால் , தமிழக அரசுத் துறைகள் கடந்த 12 ஆண்டுகளாக அத்தகவல்களை அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ( http://tn.gov.in ) வெளியிடவில்லை.
தமிழக அரசின் சார்பில் ஆன்லைன் ஆர்டிஐ போர்டலை உருவாக்குமாறும், அனைத்து துறைகள் தொடர்பான தானாக முன்வந்து வெளியிடும் (Pro-active disclosure)-ஐ அரசின் இணையதளத்தில் வெளியிடுமாறும் கோரி , ஒரு கோரிக்கை மனுவை கடந்த மே மாதம் இவ்வழக்கின் மனுதாரர் தலைமை செயலாளருக்கு அனுப்பியுள்ளார். எனினும், அரசின் பதில் திருப்திகரமாக இல்லாத காரணத்தால், தம் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசுக்கு உத்தரவிடுமாறு கோரி இவ்வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பிய வழிகாட்டுதலில், ஒவ்வொரு மாநில அரசும் இத்தகைய ஆன்லைன் ஆர்டிஐ போர்டலை உருவாக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வழக்கின் மனுதாரருக்கு தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மீதான மனுவிற்கு மகாராஷ்டிரா மாநில அரசு அனுப்பிய பதிலில், அம்மாநில அரசுக்கான ஆன்லைன் ஆர்டிஐ போர்டலானது, தேசிய தகவல் மையத்தின் (National Informatics Center) உதவியுடன் உருவாக்கப்பட்டது என்றும், இதற்கான மென்பொருள் உட்பட அனைத்து வசதிகளும் என்.ஐ.சி இடம் ஏற்கனவே இருந்த காரணத்தால் , மாநில அரசுக்கு எவ்வித செலவும் ஏற்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவற்றை கருத்தில்கொண்டு தமிழக அரசை தனக்கான ஆன்லைன் ஆர்டிஐ போர்டலை உருவாக்க உத்தரவிடுமாறு இவ்வழக்கின் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் தலைமை செயலாளர், மத்திய மற்றும் மாநில அரசுகளின் பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்தத்துறை செயலர்கள் , தேசிய தகவல் மையம் ஆகிவை பதிலளிக்குமாறு நோட்டிஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணை செப்டம்பர் 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.