தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதால், எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசால் குழந்தைகள், முதியோா், நோய்வாய்ப்பட்டுள்ள வயோதிகா்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பாதிப்புக்குள்ளாவா்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருள்களை பயன்படுத்தி பட்டாசு உற்பத்தி செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. மேலும், பட்டாசுகளை வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து போதுமான விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், திறந்த வெளியில் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் பட்டாசு வெடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசு கடந்த 4 ஆண்டுகளாக தீபாவளியன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையும் மட்டும் ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க அனுமதி அளித்துள்ளது. நிகழாண்டும் இந்த கால அளவு கடைபிடிக்கப்படும் என அறிவித்திருந்தது.
அந்த வகையில், நேற்று (31.10.2024) தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின்போது அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் வெடித்து இடையூறு ஏற்படுத்திய 13 வழக்குகள் திருச்சி மாநகரில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதேபோல், ஒட்டுமொத்த திருச்சி மாவட்டத்தில் நேற்று மட்டும் 45 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என காவல்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.
திருச்சி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“