திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை அடுத்த மூளிகுளம் பகுதியை சேர்ந்தவர் ஜெகன். இவர் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்துவந்தார்.
மேலும் இவர், பாஜகவில் நெல்லை வடக்கு மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளராகவும் இருந்து வந்தார். இவர், நேற்று அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கு குறித்து போலீசார் விசாரணை நடத்தி திமுக நிர்வாகி பிரபு உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தக் கொலை சம்பவம் திருநெல்வேலி மாவட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் இது தொடர்பாக பேசிய திருநெல்வேலி எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், “மிகவும் திட்டமிட்டு இந்தக் கொலையை நடத்தியுள்ளனர்.
சிசிடிவி கேமராக்கள் ஆஃப் செய்யப்பட்டுள்ளன. இந்தக் கொலைக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இந்த நிலையில் உடலை வாங்க மறுத்து ஜெகன் பாண்டியன் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கொலை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்கள்.
இதற்கிடையில் ஜெகன் பாண்டியன் கொலைக்கு பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டரில், “சட்டத்தின் பிடியில் இருந்து திமுக குற்றவாளிகளை தப்பிக்க முயற்சிகள் செய்தால் அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கொலை நடந்த சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் பரணி வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரிக்கும் பணிகள் நடைபெற்றன.
அப்போது 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஜெகன் பாண்டியன் உடல் மீட்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“