Tamil Nadu | Cyber Crime | திருச்சி மத்திய மாவட்ட திமுக வழக்கறிஞர் சீலா என்பவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்திருந்தார். அந்தப் புகாரில், ஒய்வு பெற்ற முன்னாள் டிஜிபி வாட்ஸ்அப்பில் ஒரு பொய்யான, தவறான போலியான செய்தியை வெளியிட்டுள்ளார்.
அதில், “இந்துக்கள் வாக்களித்துதான் வெற்றிப் பெற வேண்டும் என்றால் அப்படியொரு வெற்றி தேவையில்லை; இந்துக்களின் வாக்குகளை பெறும் அளவிற்கு திமுக தரம் தாழ்ந்துவிட வில்லை” என நியூஸ் 7 சேனலில் செய்தி வந்ததாகவும், அதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் படத்தை இணைத்து செய்தி வெளியிட்டுள்ளார்.
மேலும் கடந்த 2 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான கோவில்கள் இடிக்கப்பட்டதாகவும் பொய் செய்தி பரப்பப்பட்டுள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி முன்னாள் டிஜிபி நடராஜ் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக சென்னையில் திருமண விழா ஒன்றில் பேசிய மு.க ஸ்டாலின், “ ஒரு போலீஸ் அதிகாரி வாட்ஸ்அப்பில் ஒரு செய்தி போடுகிறார். அதற்கு நாம் வழக்குப் போட்டுள்ளோம். இந்துக்கள் ஓட்டு எங்களுக்கு வேண்டாம்; இந்துக்கள் ஓட்டு எங்களுக்கு இல்லாமலே நாங்கள் வெற்றி பெற்றுவிடுவோம் என்று நான் சொன்னதாக வாட்ஸ்அப்பில் வதந்தி பரப்புகின்றனர்.
இதை வாட்ஸ்அப்பில் போட்டுள்ளவர் ஒரு ரிட்டயர்டு போலீஸ் ஆபிசர். இப்படியெல்லாம் திட்டமிட்டு வளர்ந்து வரும் திராவிட மாடல் ஆட்சியை வீழ்த்த நினைக்கிறார்கள்.
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வரக்கூடிய தேர்தலை நீங்கள் பயன்படுத்த வேண்டும்“ என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“