பால் கலப்பம் தொடர்பாக ஆதாரம் இல்லாமல் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 3 கோடி இழப்பீடு வழங்க தனியார் பால் நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கபட்டுள்ளது.
தனியார் பால் நிறுவனங்கள் கலப்படம் செய்வதாக, தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வெளிப்படையாக குற்றம்சாட்டிப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக உடல் நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வேதிப் பொருட்கள் அவற்றில் கலக்கப்படுவதாக கூறியிருந்தார். இதை ஆதாரத்துடன் நிரூபிக்கத் தயார் என்றும் அமைச்சர் கூறினார். சில தனியார் நிறுவனங்களின் பால் மாதிரிகளை எடுத்து ஆய்வகங்களுக்கும் அவரது துறை சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் தனியார் பால் நிறுவனங்கள் தொடர்பாக ஆதாரம் இல்லாமல் பேச பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு தடைவிதிக்க வேண்டும் என்று ஹட்சன், டோட்லா, விஜய் டெய்ரி உள்ளிட்ட பால் நிறுவனங்கள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் அமைச்சரின் கருத்தால் நிறுவனத்தின் நற்பெயருக்கும் ஏற்பட்ட இழப்புக்காக மூன்று நிறுவனங்களுக்கும் தலா ஒரு கோடி ரூபாயை இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டுமெனவும் அதில் கோரியிருந்தனர்.
இந்த வழக்கு விசாரணையின் போது, எவ்வித ஆதாரமும் இல்லாமல் மனுதாரர்களுக்கு எதிராக பேசக்கூடாது என்று ராஜேந்திர பாலாஜிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்பிறகு டோட்லா, விஜய் டெய்ரி, ஆரோக்கியா ஆகிய நிறுவனங்களின் பால் மாதிரிகள் தரமற்றவை என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சில ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததால் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளிவைத்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.