புதுச்சேரியில் உள்ள ஆரோவில் அறக்கட்டளை நிர்வாகக்குழு தலைவராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி வகித்து வருகிறார். ஆரோவில் அறக்கட்டளை பொறுத்தவரை நிர்வாகக்குழுவில் இருப்பவர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் வழங்குகிறார்கள்.
ஆனால், இந்திய அரசியல் சாசனப்படி, ஆளுநர் பதவியில் இருப்பவர்கள் இரட்டை ஆதாயம் கிடைக்கும் பணியில் ஈடுபட இயலாது என்று கூறப்பட்டிருக்கிறது.
இதனால், இந்த தகவலை சுட்டிக்காட்டி ஆளுநரை இதற்கு விளக்கமளிக்குமாறு தந்தை பெரியார் திராவிட கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் கண்ணதாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு பொறுப்புத் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, "ஆளுநர் மீது இதுபோன்ற வழக்கு தொடர முடியாது என்று அரசியல் சாசனம் சட்டப்பாதுகாப்பு வழங்கி இருந்தாலும், அது ஆளுநர் என்ற அந்த பதவியின் செயல்பாடு தொடர்பானது மட்டும் தான், தனிப்பட்ட முறையில் அவரது செயல்பாடு தொடர்பாக வழக்கு தொடர முடியும்", என்றும் மனுதாரர் தரப்பில் வாதம் எடுத்து வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தற்போது, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்து இந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil