அரை நிர்வாணமாக காலில் விழ வைத்த பஞ்சாயத்து: கலெக்டரிடம் தஞ்சை காதல் ஜோடி புகார்
காதல் திருமணம் செய்ததால் இளம் தம்பதியரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தும், திருமணத்தில் பங்கேற்றவர்களை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்தும் கட்டப்பஞ்சாயத்து செய்த சம்பவம் தஞ்சையில் அரங்கேறியுள்ளது.
காதல் திருமணம் செய்ததால் இளம் தம்பதியரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தும், திருமணத்தில் பங்கேற்றவர்களை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்தும் கட்டப்பஞ்சாயத்து செய்த சம்பவம் தஞ்சையில் அரங்கேறியுள்ளது.
Thanjavur: village Panchayat made to fall half-naked: young couple complains to collector
க.சண்முகவடிவேல்
Advertisment
காதல் திருமணம் செய்ததால் இளம் தம்பதியரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தும், திருமணத்தில் பங்கேற்றவர்களை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்தும் கட்டப்பஞ்சாயத்து செய்த சம்பவம் தஞ்சை மண்ணில் அரங்கேறி இருக்கின்றது. இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட காதல் தம்பதியினர் தஞ்சை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் மனு கொடுத்து, சாஷ்டாங்கமாக ஊர் தலைவர் காலில் விழும் வீடியோவை சமூக ஊடகங்கள் முன்பும் ஆட்சியர் முன்பும் வெளியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
இது குறித்த விவரம் வருமாறு: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பொட்டலங்குடிகாடு கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் நாயக்கர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை சேர்ந்த சுமன் (28) என்பவர், அதே சமூகத்தை சேர்ந்த திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அபிநயா என்ற பெண்ணை மூன்று ஆண்டுகளாக காதலித்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த மாதம் 16ஆம் தேதி திருமணம் செய்துள்ளனர்.
Advertisment
Advertisements
இந்நிலையில் தங்களுடைய சமூகத்தின் கட்டுப்பாட்டை மீறி காதல் திருமணம் செய்ததால் தங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாகவும், ஊர் பெரியவர்கள் முன்பு காலில் விழச் செய்து கொடுமைப்படுத்தியதாக பாதிக்கப்பட்ட இளம் தம்பதியினர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட இளம் தம்பதி சுமன்-அபிநயா ஆகியோர் தெரிவிக்கையில், "நாங்கள் இருவரும் மூன்று ஆண்டுகளாக காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 16ஆம் தேதி திருமணம் செய்து கொண்டோம். எங்கள் சமூகத்தின் கட்டுப்பாட்டை மீறி காதல் திருமணம் செய்ததால், எங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக கிராம முக்கியஸ்தர்கள் கூறுகின்றனர்.
மேலும், எங்கள் திருமணத்தில் பங்கேற்ற எங்களுடைய உறவினர் மற்றும் நண்பர்களை ஊரை விட்டு ஒதுக்கி விட்டதாகவும், ஊரில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றால் அவர்கள் அபராத தொகை கட்ட வேண்டும் எனவும், சமூக தலைவரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கட்டாயப்படுத்தியதால் தான் திருமணத்தில் பங்கேற்றவர்கள் அபதாரம் கட்டி, தலைவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டனர்.
மேலும் எங்களை ஊரை விட்டு ஒதுக்கியவர்கள், தங்களை சாணி கரைத்து சுத்தப்படுத்த வேண்டும் என்றும், ஊரில் எந்த நிகழ்விலும் பங்கேற்க கூடாது, கட்டுப்பாட்டை மீறி திருமணம் செய்ததால் பல லட்சம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என மிரட்டுகின்றனர். எனவே, ஊரை விட்டு ஒதுக்கிய அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடமும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் புகார் கொடுத்துள்ளேன்' என்றார்.
இது குறித்து புகார் மனுவில் தெரிவித்துள்ள ஊர் தலைவர் கணேசன் என்பவரிடம் கேட்டபோது, இதுபோன்று நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என்றும் அவர்கள் நடத்தை மற்றும் பேச்சு பிடிக்காததால் தாங்கள் அவர்களை விட்டு விலகி விட்டதாகவும், மேலும் காலில் விழும்படி யாரையும் கட்டாயப்படுத்தவில்லை, அபராதம் யாரையும் கட்ட சொல்லவில்லை எனவும், வயதில் மூத்தவன் என்பதால் தன்னிடம் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஏதேனும் புகார்கள் தெரிவிப்பார்கள், அவர்களிடம் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து வைப்பதாகவும் தெரிவித்தார். இருப்பினும், பந்தல் போட்டு நாற்காலியில் அமர்ந்து இளைஞர்களை அரை நிர்வாணமாக காலில் விழுச்செய்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி இருக்கின்றது.
என்னதான் சாதி மதம் இல்லை என தம்பட்டம் அடித்தாலும் அங்கொன்றும் இங்கொன்றும் என தினம், தினம் சாதிய மோதல்கள், சாதிய வன்மங்கள் தமிழ்நாட்டில் நடந்து கொண்டே இருப்பது வேதனை அளிக்கிறது. தமிழ்நாட்டில் இது போன்ற சம்பவங்களை ஒருங்கிணைந்த தஞ்சை மண்ணில் பிறந்து முதல்வர் நாற்காலியை அலங்கரிக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலையிட்டு, இதுபோன்ற தீண்டாமை சம்பவங்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.