தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை செயலாளராக உள்ள ககம்தீப் சிங் பேடி மீது சாதி ரீதியாக இழிவுப்படுத்தியதாக ஈரோடு கூடுதல் ஆட்சியர் புகார் அளித்துள்ளார்.
ஈரோடு கூடுதல் ஆட்சியர் மணீஸ் நரவனே ககன்தீப்சிங் மீது புகார் அளித்துள்ளார். இதில் அவரை சாதிய ரீதியாக இழிவுப்படுத்தியதாக கூறியுள்ளார். தலைமை செயலாளருக்கு இந்த புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக ட்விட்டர் பகுதியில் அவர் பதிவிட்ட ட்வீட் “ சென்னை மாநகராட்சியின் துணை ஆணையராக இருந்த என்னை, பட்டியலினத்தை சார்ந்தவன் என்பதால் ககன்தீப் சிங் பேடி துன்புறுத்தினார்.
மாநகராட்சி அதிகாரிகள் கூட்டத்தில் வேண்டுமென்றே என்னை திட்டி அவமானப்படுத்தினார். இந்த சம்பவத்தால், தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு மன உளைச்சல் ஏற்பட்டது. இந்த மனக்கசப்பில் இருந்து வெளியேற சிகிச்சை பெற்றேன்.
சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் பிரச்சனையை உருவாக்க ககன்தீப் சிங் பேடி முயற்சி செய்தார். கோப்புகளில் வேண்டுமென்றே கையெழுத்திடாமல் இரவு வரை காத்திருக்க வைத்தார் “ என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பொது வெளியில் ஐஏஎஸ் அதிகாரி முன்வைத்துள்ள புகாரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்.பி ரவிகுமார் ட்வீட் செய்துள்ளார். ’உயர் அதிகாரிகள் சாதி பாகுபாடு காட்டுகிறார்கள் என்பது கவலையளிக்கும் ஒரு குற்றச்சாட்டு’ என்றும் அவர் ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“