பாடப் புத்தகங்களில் சாதிப் பெயர் ஒழிப்பு: ராமதாஸ், திருமாவளவன் மாறுபட்ட கருத்து

Tamil News Update : தமிழகத்தில் பாடப்புத்தகங்களில் சாதி பெயர் நீக்கம் குறித்து தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Tamilnadu News Update : தமிழகத்தில் பள்ளிகளுக்கு வழங்கப்படும் அரசின் பாடப்புத்தகங்களில் தலைவர்களின் சாதி பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் தலைவர்கள் பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழங்கப்படும் பாடப்புத்தகங்களில் பல்வேறு தலைவர்கள் பற்றிய குறிப்புகள் பாடமாக அமைந்துள்ளது. இதில் தலைவர்களில் பெயருக்கு பின்னர்ல் அவர்களின் சாதி பெயருடன் இடம்பெற்றிருந்தது. ஆனால் தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த ஆண்டுக்கான பாடப்புத்தகத்தில் தலைவர்களின் சாதி பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ் தாத்தா என்று அழைக்கப்படும் உ.வே.சாமிநாத ஐயர் தமிழுக்கு அளித்த மகத்தான போற்றும் வகையில் பள்ளி பாடப்புத்தகத்தில் அவர் வாழ்க்கை வரலாறு குறித்த பகுதி இடம்பெற்றுள்ளது.  இதுவரை ஊ.வே.சாமிநாத ஐயர் என்று இருந்த அவரது பெயரை தற்போது தமிழ்நாடு பாடநூல் கழகம் சாதி அடையாளத்தை நீக்கும் நடவடிக்கையின் காரணமாக உ.வே.சாமிநாதர் என்று மாற்றியுள்ளது.

பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் பாடப்புத்தகத்தில், இடம்பெற்றுள்ள சுவாமிநாத ஐயரின் ‘பண்டைய காலத்து பள்ளிகூடங்கள்’ (பண்டைய கால பள்ளிகள்) என்ற பாடப்பகுதியில் உ.வே.சாமிநாதர் என்று அச்சிடப்பட்டுள்ளது.  மேலும் ஆசிரியர், மீனாட்சிசுந்தரம் பிள்ளை என்ற பெயர் மீனாட்சிசுந்தரனார் என்றும், முதல் தமிழ் நாவலின் ஆசிரியரான மாயவரம் வேதநாயகம் பிள்ளை என்ற பெயர் வேதநாயகம் என்றும் மாற்றப்பட்டள்ளது. இலங்கைத் தமிழ் அறிஞர் சி.டபிள்யூ. தாமோதரம்பிள்ளை என்பது தாமோதரனார் என்றும், கவிஞர் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை என்பது ராமலிங்கனார் என்றும்,  மாற்றப்பட்டுள்ளது.

1978 ஆம் ஆண்டில், திராவிடர் கழகத்தின் நிறுவனர் பெரியார் ஈ.வே. ராமசாமியின் நூற்றாண்டு விழாவில் பேசிய, அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர்  தெருக்கள் மற்றும் சாலைகளின் பெயர்களில் இருந்து சாதி குறிப்புகளை அகற்ற தனது அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 1997 ம் ஆண்டு, தென் மாவட்டங்களில் நடந்த சாதிய கலவரத்தைத் தொடர்ந்து, அப்போதைய முதல்வர் மு. கருணாநிதி பல்வேறு மாவட்டங்களுக்கு வழங்கப்பட்ட தலைவர்களின் பெயர்களை நீக்கி உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பெயரில், போக்குவரத்து கழகங்களில் இருந்த பல்லவன், பாண்டியன், சேரன், சோழன் மற்றும் பட்டுக்கோட்டை அழகிரி போன்ற பெயர்களும் நீக்கப்பட்டது.

தற்போது பாடபுத்தகங்களில் தலைவர்களின் பெயர்களை நீக்கியது குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் பலவகையான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சாதிகளை ஒழிக்க வேண்டும் என்ற அரசின் நோக்கம் வரவேற்கத்தக்கது தான் என்றாலும் கூட, இத்தகைய நடவடிக்கைகள் சாதிக்கு பதிலாக அடையாளத்தை தான் அழிக்கும். சாதியை ஒழிக்க வேண்டும் என்ற அரசின் நோக்கத்தை குறை கூற முடியாது. ஆனால், அனைத்து மக்களிடமும் சமத்துவத்தை ஏற்படுத்துவதன் மூலம் தான் சாதியை ஒழிக்க முடியும். அதற்காகத் தான் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்துவதற்காக கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதி நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

அத்தகைய நடவடிக்கைகள் தொடர வேண்டும். அதை விடுத்து பாடநூல்களில் இடம் பெற்றிருக்கும் தலைவர்களின் பெயர்களில் உள்ள சாதியை நீக்குவது என்பது புரிதல் இல்லாத செயலாகவே தோன்றுகிறது. வட இந்தியத் தலைவர்கள் பெயர்களில் இருந்து சாதிப் பெயர்கள் நீக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் சாதனை படைத்த தலைவர்களின் அடையாளம் என்ற வகையிலாவது அவர்களின் பெயர்கள் இப்போது வரை எவ்வாறு அழைக்கப்பட்டனவோ அப்படியே நீடிக்க அனுமதிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் பெயருக்குப் பின்னால் சாதி பெயரை இட்டுக்கொள்ளும் வழக்கம் ஐம்பதாண்டுகளுக்கு முன்பே முடிவுக்கு வந்து விட்டது. அதனால் இனிவரும் காலங்களில் உருவெடுக்கும் சாதனையாளர்கள் தலைவர்களின் பெயருக்கு பின்னால் சாதிப் பெயர் போட வேண்டிய தேவையிருக்காது. ஏற்கனவே சாதிப் பெயர்களுடன் கூடிய தலைவர்களின் பெயர்கள் பாடநூல்களிலும், இதர ஆவணங்களிலும் அப்படியே நீடிக்க அனுமதிக்க வேண்டும். தமிழ்நாட்டில் சாதியை ஒழிக்க ஒரே வழி சமத்துவத்தை ஏற்படுத்துவது தான். அதற்கான நடவடிக்கைகளைத் தான் அரசு விரைவுபடுத்த வேண்டும். அந்த நடவடிக்கைகளை பா.ம.க. ஆதரிக்கும் ’ எனக் கூறியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், திராவிட முன்ன்னேற்ற கழக தலைமையிலான அரசு ஒரு சமூக நீதி அரசு. பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்களின் கொள்ளை வழியில் இயங்குகிற அரசு. எனவே சாதியின் பெயரால் உள்ள பாகுபாடுகளை களைவதற்கு அனைத்து தளங்களிலும் முன்முயற்சி மேற்கொண்டு வருகிறது. அந்த அடிப்படையில் பாடப்புத்தகங்களிலவ் உள்ள சாதிப்பெயர்களை நீக்கும் முயற்சியில் ஈடுபடுவது வரவேற்கத்தக்கது என்று கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Caste name removed in text book leaders reaction tamilnadu

Next Story
அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் மரணம்: கட்சியினர் அஞ்சலி
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express