செய்யாறு நகரில் இரவு நேரங்களில் சாலைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் சுற்றித் திரிவதால், வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வருவதால் நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்குமா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சென்னையில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடு ஒன்று பள்ளியில் இருந்து வீட்டுக்கு திரும்பிய சிறுமியை ஒரு மாடு மிகக் கொடூரமாக முட்டி காயப்படுத்திய சம்பவத்தின் சி.சி.டி.வி காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதற்குப் பிறகு, சென்னை மாநகராட்சி நிர்வாகம் சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிந்தால் அந்த மாடுகள் பறிமுதல் செய்யப்படுவதோடு, உரிமையாளருக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தது.
அதே போல, அண்மையில் வெளியான ஒரு சி.சி.டி.வி வீடியோவில், சாலையில் செல்லும் மாடு ஒன்று ஒருவரை கடுமையாக முட்டி குத்தி மிதித்த காட்சி பார்ப்பவர்களை நடுங்கச் செய்தது.
இதனால், தமிழ்நாடு முழுவதும் நகரங்களில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை அப்புறப்படுத்த வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன.
/indian-express-tamil/media/media_files/C76yq0rDN5Jw6o4sr2Sg.jpeg)
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகரத்தில், இரவு நேரத்தில் முக்கிய சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் சுற்றித் திரிவதால் அவ்வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் திடீரென குறுக்கே வரும் மாடுகள் மீது மோதி விபத்துக்குள்ளாவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதனால், செய்யாறில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் பெரிய விபத்துகள் ஏற்படுவதற்கு முன்பு, செய்யாறு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
/indian-express-tamil/media/media_files/T3v0Uf9m7EOuseUxdJ0F.jpeg)
செய்யாறு நகரத்தில் பெரியார் சிலை முதல் ஆரணி கூட்டுரோடு வரையிலான முக்கிய சாலையில் இரவு நேரங்களில் நிறைய மாடுகள் சுற்றித் திரிவதைப் பார்க்க முடிகிறது. செய்யாறு நகரத்தில் மாடு வளர்க்கும் மாட்டின் உரிமையாளர்கள் மாடுகளைக் கட்டி வைக்காமல் அவிழ்த்து விட்டு விடுவதால், மாடுகள் செய்யாறு நகரத்தில் காய்கறி கடைகளில் இருந்து கொட்டப்படும் வீணான காய்கறி கழிவுகளை உண்பதற்காக இரவு நேரங்களில் சாலைகளில் சுற்றித் திரிகின்றன.
செய்யாறு நகரத்தில் இரவு நேரங்களில் சாலைகள் காலியாக இருக்கும் என்று கருதும் இருசக்கர வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தை வேகமாக ஓட்டிச் செல்கிறனர். அப்போது வேகமாக திடீரென குறுக்கே வரும் மாடுகள் மோதி நிறைய விபத்துகள் நடக்கிறது. அவர்கள் சிறிய காயங்களுடன் அங்கே இருந்து செல்கின்றனர். மாடுகள் மீது மோதி விபத்து ஏற்படுவதால் இது குறித்த புகார்களும் காவல் துறைக்கு செல்வதில்லை. செய்யாறில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் பெரிய விபத்துகள் ஏற்படுவதற்கு முன் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காந்தி சாலையில் கடை வைத்திருக்கும் பெயர் குறிப்பிட விரும்பாத வியாபாரி ஒருவர் கூறினார்.
/indian-express-tamil/media/media_files/UvLg7tnXlsSiwwiErjVx.jpeg)
செய்யாறு நகரத்தில் இரவு நேரங்களில் சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிவதால் ஏற்படும் சின்னச் சின்ன விபத்துகள் குறித்தும், மாடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பொதுமக்கள் கடைக்காரர்களின் கோரிக்கை குறித்து செய்யாறு நகராட்சி - திருவத்திபுரம் நகராட்சி பொறுப்பு ஆணையர் குமரன் இடம் போனில் தொடர்புகொண்டு பேசினோம்.
அவர் கூறியதாவது: “அண்மையில் சென்னையில்கூட ஒரு சிறுமியை சாலையில் திரியும் மாடு முட்டி காயப்படுத்திய வீடியோ வெளியானது. இதையடுத்து, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. செய்யாறு நகரத்தில் இதே போல மாடுகள் சுற்றித் திரிவது எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளீர்கள். நகராட்சி ஊழியர்களிடம் சொல்லி அந்த மாடுகளை அப்புறப்படுத்தி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்கிறேன்” என்று கூறினார்.
/indian-express-tamil/media/media_files/QEzHnSeIg7ET5mfSxmsp.jpeg)
தொடர்ந்து பேசிய அவர், “சில நேரங்களில் அப்படி சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடித்து வந்து நம்முடைய கொட்டகையில் வைத்திருக்கும்போது, உரிமையாளர்கள் யாரும் மாடடுகளைத் தேடி வருவதில்லை. அதனால், அந்த மாடுகளை நகராட்சி நிர்வாகம் பராமரிக்க வேண்டியதாகி விடுகிறது. இது போன்ற நிலையும் உள்ளது” என்று திருவத்திபுரம் நகராட்சி பொறுப்பு ஆணையர் குமரன் கூறினார்.
செய்யாறு நகரத்தில் இரவு நேரங்களில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் பெரிய விபத்துகள் ஏற்படுவதற்கு முன் நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“