Advertisment

திருப்பதி லட்டு சர்ச்சை; ’எங்கள் மாதிரிகள் முதலில் தேசிய ஆய்வகங்களில் சோதிக்கபட்டன’ - நெய் சப்ளை செய்த ஏ.ஆர் டெய்ரி

திருப்பதி கோவிலுக்கு கலப்பட நெய் சப்ளை செய்ததாக புகார்; தேசிய ஆய்வகங்களில் எங்கள் நிறுவனத்தின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாக திண்டுக்கல்லைச் சேர்ந்த ஏ.ஆர் டெய்ரி தகவல்

author-image
WebDesk
New Update
ar dairy

திருப்பதியில் லட்டு பிரசாதத்திற்கு நெய் சப்ளை செய்து இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ள திண்டுக்கலில் உள்ள ஏ.ஆர்.டெய்ரி ஃபுட்ஸ் (ஏ.என்.ஐ புகைப்படம்)

Arun Janardhanan 

Advertisment

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலுக்கு கலப்பட நெய் சப்ளை செய்ததாக தமிழகத்தைச் சேர்ந்த ஏ.ஆர் டெய்ரி (AR Dairy) ஃபுட் பிரைவேட் லிமிடெட் மீது திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) சட்ட நடவடிக்கை எடுத்த ஒரு நாள் கழித்து, எந்த அறிக்கையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்பட்டது என்று ஏ.ஆர் டெய்ரி நிறுவனம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஆங்கிலத்தில் படிக்க: Caught in Tirupati laddu row, firm that supplied ghee: ‘Our samples first tested at national labs’

திண்டுக்கல்லைச் சேர்ந்த ஏ.ஆர் டெய்ரி ஃபுட் நிறுவனத்தின் தரக் கட்டுப்பாட்டு அதிகாரி கண்ணன் வெள்ளிக்கிழமை தமிழ் செய்தி சேனலுக்கு அளித்த கருத்துகளில், குற்றச்சாட்டுகள் "ஆதாரமற்றவை" என்று கூறினார். ஏ.ஆர் டெய்ரியின் நெய் மாதிரிகளில் "அதிக கலப்படம்" கண்டுபிடிக்கப்பட்டதாக திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஜே.ஷியாமளா ராவ் அறிவித்த ஒரு நாள் கழித்து கண்ணனின் கருத்துக்கள் வந்துள்ளன.

"நாங்கள் 1998 முதல் செயல்பட்டு வருகிறோம், எங்கள் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவது இதுவே முதல் முறை" என்று கண்ணன் கூறினார்.

ஏ.ஆர் டெய்ரி நிறுவனம் சொந்த கொள்முதல் மையங்களை நடத்துகிறது மற்றும் 32 வினாடிகளுக்குள் 102 தர அளவுருக்கள் வரை பாலை சோதிக்க மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. பால் தர சோதனையில் தோல்வியடைந்தால், அது உடனடியாக நிராகரிக்கப்படும்,'' என்று கண்ணன் கூறினார்.

திருப்பதி கோவிலுக்கு நெய் வழங்க ஏ.ஆர் டெய்ரிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும், கோயில் நிர்வாகத்தின் நான்கு பேர் கொண்ட நிபுணர் குழு, நிறுவனத்தின் திறன் மற்றும் தரக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மதிப்பிடுவதற்காக ஏ.ஆர் டெய்ரி ஆலையை பார்வையிட்டு ஆய்வு செய்ததாகவும் கண்ணன் கூறினார்.

"எங்கள் நெய் மாதிரிகள் திருப்பதி கோவிலுக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு தேசிய ஆய்வகங்களில் முதலில் சோதிக்கப்படுகின்றன. முடிவுகள் வந்ததும், திருப்பதி தேவஸ்தானத்தின் உணவு பாதுகாப்பு அதிகாரி மீண்டும் மாதிரிகளை சரிபார்க்கிறார்,” என்று கண்ணன் கூறினார்.

ஏ.ஆர் டெய்ரி ஐ.எஸ்.ஓ (ISO) சான்றிதழைப் பெற்றுள்ளது மற்றும் கடுமையான தர நெறிமுறைகளைப் பின்பற்றுகிறது. முந்தைய அறிக்கைகள் எதுவும் தரத்தில் எந்த முறைகேடுகளையும் சுட்டிக்காட்டவில்லை, என்று கண்ணன் கூறினார். வெளிப்படைத் தன்மையுடன் பொறுப்பு உணர்வை உறுதிப்படுத்த மாதிரி சேகரிப்பு வீடியோ பதிவு செய்யப்படுகிறது என்றும் கண்ணன் கூறினார்.

"தாவர எண்ணெய் முதல் விலங்கு கொழுப்பு வரை கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த குற்றச்சாட்டுகள், எங்கள் வணிகத்தை கடுமையாக பாதிக்கின்றன. மேலும், மீன் எண்ணெய் சேர்க்கப்பட்டது என்ற கூற்று அபத்தமானது; நெய்யை விட மீன் எண்ணெய் விலை அதிகம். இந்த வகையான கலப்படம் உடனடியாக வாசனை மூலமே கண்டறியப்படும்,” என்று கண்ணன் கூறினார், மேலும், திருப்பதி தேவஸ்தானத்தின் லட்டு தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் மொத்த நெய்யில் “மிகச் சிறிய அளவே” ஏ.ஆர் டெய்ரி நிறுவனம் சப்ளை செய்கிறது என்றும் கண்ணன் கூறினார்.

“திருப்பதி கோவிலுக்கு நெய் சப்ளை செய்வதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். எங்களுக்கு, இது வியாபாரம் மட்டுமல்ல; இது ஒரு ஆசீர்வாதம் மற்றும் கவுரவம்,” என்று கண்ணன் தமிழ் செய்தி சேனலுக்கு தெரிவித்தார்.

திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஜே.ஷியாமளா ராவ் ஒரு செய்தியாளர் சந்திப்பில், பிரபலமான கோயில் பிரசாதமான லட்டுகளின் தரம் குறைந்து வருவதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, ஏ.ஆர் டெய்ரி வழங்கிய நெய் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டது என்று கூறிய ஒரு நாள் கழித்து இந்த கருத்துக்கள் வந்துள்ளன. 

"ஏ.ஆர் டெய்ரி வழங்கிய 10 டேங்கர் நெய்களில், நான்கு டேங்கர் நெய்களில் அதிக கலப்படம் இருப்பது கண்டறியப்பட்டது" என்று ஷியாமளா ராவ் கூறினார்.

முந்தைய ஒய்.எஸ் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசாங்கம் லட்டு தயாரிப்பில் விலங்குகளின் கொழுப்பு மற்றும் மீன் எண்ணெயைப் பயன்படுத்த அனுமதித்ததாக ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடு தேசிய ஜனநாயக கூட்டணி சட்டமன்றக் கூட்டத்தில் குற்றம் சாட்டிய சில நாட்களுக்குப் பிறகு இந்த கருத்துக்கள் வந்துள்ளன.

சென்னையிலுள்ள உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி டாக்டர் சதீஷ்குமாரை தொடர்பு கொண்டபோது, வழக்கு விவரங்கள் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். இருப்பினும், உணவுக் கலப்படத்தைக் கண்டறிய இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) கீழ் நிலையான நெறிமுறைகள் உள்ளன, இவை நாடு முழுவதும் பின்பற்றப்படுகின்றன என்று சதீஷ்குமார் கூறினார்.

“தமிழகத்தில், நாங்கள் FSSAI வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடிக்கிறோம். கலப்படம் என சந்தேகிக்கப்படும்போது, ஒரே தொகுப்பிலிருந்து பல மாதிரிகளை, சாட்சிகள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் சேகரித்து, சோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்புகிறோம். முடிவுகள் மாசுபாட்டைக் காட்டினால், சப்ளையர் அல்லது கடை உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும், அவர்கள் 30 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும்,” என்று சதீஷ்குமார் கூறினார்.

நெய்யில் பயன்படுத்தப்படும் விலங்குகளின் கொழுப்பு அல்லது மீன் எண்ணெயின் சாத்தியமான பயன்பாடு பற்றி கேட்கப்பட்டதற்கு, ”வாசனை மற்றும் சுவை மூலம் இரண்டும் மிகவும் கண்டறியக்கூடியதாக இருக்கும். விலங்குக் கொழுப்பு அல்லது மீன் எண்ணெய் சேர்க்கப்பட்டால், இந்தப் பொருட்களைப் பழக்கமில்லாதவர்கள் உடனடியாக கண்டறிந்து விடுவார்கள். குறிப்பாக மீன் எண்ணெயின் வாசனையை மறைக்க முடியாது,” என்று சதீஷ்குமார் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamilnadu Tirupati Tirupathi Devasthanam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment