திருச்சி மாவட்டத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக திருச்சி காவிரி பாலமும் திகழ்கிறது. திருச்சி மாநகரத்தையும் ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் வகையில் உள்ள இந்தப் பாலம் கடந்த 1976ஆம் ஆண்டு கட்டப்பட்டு, முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் பிரம்மானந்த ரெட்டி, தமிழக ஆளுநரின் ஆலோசகர் ஆர்.பி. சுப்பிரமணியன் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.
கட்டப்பட்டு 45 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ள பழமை வாய்ந்த இந்த காவிரி பாலத்தில் அவ்வப்போது பல்வேறு பிரச்சினைகள் எழுந்து வந்தது. அதிர்வு தாங்க முடியாத நிலையில் பேரிங்குகள் சேதம் அடைந்தன.
இந்நிலையில், திருச்சி காவிரி பாலம் ரூ.6 கோடியே 87 லட்சம் மதிப்பிட்டில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டு பாலத்தின் பராமரிப்புப் பணிகளுக்காக நேற்று நள்ளிரவு முதல் தற்காலிகமாக காவிரி பாலம் மூடப்பட்டது. இதனால் பாலத்தின் வழியாக செல்லும் வாகன போக்குவரத்தில் மாற்றங்கள் கீழ்க்கண்டவாறு செயல்பட அறிவுறுத்தப்பட்டன.
-
காவிரி பாலம் மூடப்பட்டது, வாகன ஓட்டிகள் அவதி
அதன்படி, ஸ்ரீரங்கம் செல்லும் பேருந்துகள், ஓடத்துறை ரயில்வே பாலம், கும்பகோணத்தான் சாலை வழியாக திருவானைக்காவல் அடைந்து ஸ்ரீரங்கம் செல்லலாம். அதேபோன்று, ஸ்ரீரங்கத்தில் இருந்து திருவானைக்காவல் மேம்பாலத்தின் வழியாக, கும்பகோணத்தான் சாலை மற்றும் ஓயாமரி வழியாக சத்திரம் பேருந்து நிலையம் செல்லலாம்.
திருச்சியில் இருந்து சென்னை செல்லும் வாகனங்கள், நகர வழி போக்குவரத்தை தவிர்த்து, புறவழிச்சாலை வழியாக சஞ்சீவி நகர் மார்க்கமாக டோல்கேட் அடைந்து சென்னை செல்லலாம். அதுபோல, சென்னையில் இருந்து திருச்சி வரும் வாகனங்களும், டோல்கேட் புறவழிச்சாலை மார்க்கமாக திருச்சி அடையலாம் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் பராமரிப்பு பணி காரணமாக மூடப்பட்ட திருச்சி காவிரி பாலத்தால் திருச்சி-சென்னை பைபாஸ் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
முதல் நாளே இந்த போக்குவரத்து நெரிசலால் சாலையில் ஒன்றரை கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. அதே நேரம், காவிரி பாலத்தில் இரு சக்கர வாகனங்கள் மட்டும் செல்ல 2 மீட்டர் அகலத்தில் வழி விடப்பட்டுள்ளது.
-
அறிவிப்பு பலகை
ஆனால் அது எதிரும் , புதிரும்மாக வாகனங்கள் செல்லுமாறு ஏற்பாடு செய்யப்பட்டதாலும், ஒரு புறம் கயிறு கட்டட் பட்டுள்ளதாலும் (சிலர் அந்த கயிறை தூக்கி குனிந்து செல்கின்றனர்) அந்த கயிற்றில் இரு சக்கர வாகனத்தின் கண்ணாடி மாட்டி பேரிகார்டு கீழே விழுகிறது.
எனவே 2 மீட்டர் அகலத்தை 3 மீட்டாரக மாற்றி கயிறுக்கு பதில் பேரிகார்டுகளை வைக்கவேண்டும்.
இன்று ஞாயிற்றுக்கிழமையே இவ்வளவு நெருக்கடி எனில் நாளை திங்கள் கிழமை வேலை மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகளால் மிக நெருக்கடி ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அதேபோல் சஞ்சீவி நகர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்லும் பகுதியில் பேரிகார்டு வைத்து அடைக்கப்பட்டிருந்தது, இதனால் நீண்ட தொலைவு வாகனங்கள் அணிவகுத்தன. இதனால் வாகன ஓட்டிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிலவியது.
இதனை அடுத்து மாலை சஞ்சீவி நகர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் பகுதியில் இருந்த பேரிகார்டுகள் அகற்றப்பட்டது.
இதனை அறிந்த அமைச்சர் கே.என்.நேரு போக்குவரத்தை சீரமைப்பது தொடர்பாக சம்பவயிடத்தில் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.
திருச்சி மாம்பழச் சாலையில் இருந்து அம்மா மண்டபம் வழியாக ஸ்ரீரங்கம் சென்று வரும் சாலையில் முற்றிலும் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் அப்பகுதியில் இருந்து மாநகருக்கு வரும் அம்மா மண்டபம் பகுதி பொதுமக்கள் பேருந்துகள் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
தங்களுக்கு மாற்று ஏற்பாட்டினை செய்து தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“