திருச்சி காவிரி பாலம் மிகவும் பழுதடைந்துள்ளதால், இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்கள்கூட பாலத்தில் மிகவும் சிரமப்பட்டு பயணிக்கின்றனர். கடந்த மூன்று மாத காலமாக காவிரி பாலத்தை மூடுவதற்கு மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை, காவல்துறையினர் திட்டமிட்டு வந்தனர்.
இந்நிலையில் முதலில் ஆடிப்பெருக்கு விழா வந்ததால் காவிரி பாலம் மூடுவதில் சிக்கல் ஏற்பட்டது. அதற்கு அடுத்ததாக காவிரியில் அதிக அளவு நீர் பெருக்கெடுத்து ஓடியதால் மூடுவதை தள்ளி வைத்தனர். அது மட்டுமில்லாமல் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் காவிரி பாலத்தில் வைத்து கரைக்கப்பட்டது. இதற்கு பிறகு, காவிரி பாலத்தில் இனி பொது மக்களுக்கு வேலை இல்லை என்ற நிலையில், காவிரி பாலத்தை பராமரிப்பதற்கான முதற்கட்ட பணிகள் வரும் 10ஆம் தேதி முதல் துவங்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதைஅடுத்து, திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பழைய காவிரி பாலத்தில் அதற்காக போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டடுள்ளன. வருகிற செப்டம்பர் 10ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் காவிரி பாலம் ஒரு வழியாக பராமரிப்பு பணிக்காக மூடப்படுகிறது. இருசக்கர வாகனங்கள் மட்டுமே காவிரி பாலத்தில் அனுமதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: :
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம், திருவானைக்கோவில் செல்லும் வழியில் உள்ள காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட காவிரிப் பாலத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள 5 மாத காலம் ஆவதால் , மேற்படி காவிரிப் பாலத்தின் மேல் செல்லும் வாகனங்களின் போக்குவரத்தை வருகின்ற 10.09.2022 சனிக்கிழமை இரவு 12 மணி முதல் கீழ்காணும் மாற்றுப் பாதையில் செல்லும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் முதல் அண்ணாசிலை வழியாக ஸ்ரீரங்கம் செல்ல காவிரிப் பாலத்திற்கு முன்னதாக உள்ள ரயில்வே மேம்பாலத்திலிருந்து ஓயாமரி வழியாக (காவிரி தென் கரை சாலை) சென்று இடதுபுறம் திரும்பி சென்னை பையாஸ் சாலை ( சென்னை திருச்சி – திண்டுக்கல் சாலை) பழைய பாலத்தின் வழியாகச் சென்று இடதுபுறம் திரும்பி கும்பகோணத்தான் சாலை ( காவிரி இடது கரை சாலை வழியாக ரயில்வே மேம்பாலம் ஏறி திருவானைக்கோவில் அடைந்து ஸ்ரீரங்கம் செல்லலாம்.
ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்திலிருந்து இடதுபுறம் உள்ள திருவானைக்கோவில் செல்லும் சாலையில் ரயில்வே மேம்பாலத்தின் வழியாக திருவானைக்கோவில் வந்தடைந்து வலதுபுறம் திரும்பி ட்ரங்க் சாலை வழியாக ரயில்வே மேம்பாலம் ஏறி இடதுபுறம் திரும்பி கும்பகோணத்தான் சாலை வழியாக வந்து திரும்பி சென்னை பைபாஸ் சாலை ( சென்னை திருச்சி – திண்டுக்கல் – சாலை ) பழைய பாலத்தின் வழியாக வந்து வலதுபுறம் திரும்பி ஓயாமரி வழியாக ( காவிரி தென்கரை சாலை ) அண்ணாசிலை வந்தடைந்து சத்திரம் பேருந்து நிலையம் செல்லலாம் .
திருச்சியிலிருந்து சென்னை செல்லும் வாகனங்கள் நகர வழி போக்குவரத்தைத் தவிர்த்து புறவழிச்சாலை வழியாக சஞ்சீவி நகர் மார்க்கமாக காவிரி புதுப்பாலம் வழியாக நெ .1 . டோல்கேட் அடைந்து சென்னை செல்லலாம் . அவ்வாறே சென்னையிலிருந்து திருச்சி வரும் வாகனங்கள் நெ.1.டோல்கேட் அடைந்து காவிரி புதுப்பாலம் வழியாக வந்து புறவழிச்சாலை மார்க்கமாக திருச்சி அடையலாம்.
சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் புறநகர் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் அண்ணாசிலை வழியாக காவிரி பாலத்திற்கு முன்னதாக உள்ள ரயில்வே மேம்பாலத்திலிருந்து ஓயாமரி வழியாகச் சென்று இடதுபுறம் திரும்பி சென்னை பைபாஸ் சாலை காவிரி பழைய பாலத்தில் சென்று நேராக நெ.1.டோல்கேட் சென்று செல்லலாம். இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
செய்தி: க. சண்முகவடிவேல் - திருச்சி
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.