நீண்ட காலமாக தொடர்ந்து வந்த, தமிழ்நாடு, கர்நாடகா இடையேயான காவிரி நதி நீர் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
கடந்த 125 ஆண்டுகளுக்கும் மேலாக கர்நாடகா, தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சனை நீடிக்கிறது. இதன் காரணமாக கடந்த 1892-ம் ஆண்டு முதல் மெட்ராஸ் - மைசூரு மாகாணங்களுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக 50 ஆண்டுகளுக்கு சேர்த்து 1924-ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டது.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, காவிரி நடுவர் மன்றம் ஏற்படுத்தப்பட்டது. காவிரி பிரச்சனை முடிவுக்கு எட்டாததால் காவிரி நடுவர் மன்றம் ஏற்படுத்தப்படுவதாக மத்திய அரசு தெரிவித்தது. இந்நிலையில், காவிரி வழக்கை விசாரித்த நடுவர் மன்றம், தமிழகத்துக்கு 10 மாத கால இடைவெளியில் 192 டிஎம்சி காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும் என்று 2007-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி இறுதி தீர்ப்பு வழங்கியது.
இருப்பினும், 192 டிஎம்சி நீர் போதாது என்பதால் கூடுதலாக 72 டிஎம்சி நீரை திறந்துவிட வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செயயப்பட்டது. அதே போல், கர்நாடகா அரசும், தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை 32 டிஎம்சியாக குறைத்து உத்தரவிடக்கோரி மேல்முறையீடு செய்தது. காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்புக்கு எதிராக தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களும் கடந்த 20 ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கை நடத்தி வந்தன. கடந்த ஆண்டு இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ,'' நூற்றாண்டுக்கும் மேலாக நடக்கும் காவிரி வழக்கை, ஒரே மாதத்தில் விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும்''என உத்தரவிட்டது.
இதையடுத்து, காவிரி வழக்கு விசாரணை கடந்த ஆண்டு ஜீலை மாதம் துவங்கி செப்டம்பர் மாதம் வரை சுமார் 27 நாட்கள் நடைப்பெற்றது. விசாரணையின் போது தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் மூத்த வழக்கறிஞர்கள் தங்கள் தரப்பு விவாதங்களை முன்வைத்தனர். இந்நிலையில், வழக்கு தீர்ப்பு மறுதேதி குறிப்பிடபடாமல் 20 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
வழக்கின் விசாரணை நிறைவடைந்து 150 நாட்கள் நெருங்கும் நிலையில் உச்ச நீதிமன்றம் காவிரி வழக்கு தொடர்பான இறுதி தீர்ப்பை இன்று காலை 10 மணிக்கு (16.2.18) வழங்குகிறது. இதனால் கர்நாடகா - தமிழக எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.