க.சண்முகவடிவேல்
Thanjavur | Cauvery Management Board: தஞ்சாவூர் பனகல் கட்டிடம் அருகே இன்று மேகேதாது அணைக்கு அனுமதி பெற சூழ்ச்சியாகச் செயல்படும் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ்.கே. ஹல்தரின் உருவபொம்மையை எரித்து காவிரி உரிமை மீட்புக் குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேகேதாது அணை கட்டுவதற்கு கர்நாடகா அரசுக்கு துணை நிற்கும் மத்திய அரசையும், அதற்குத் துணையாக இருந்து சூழ்ச்சி செய்து வரும் எஸ்.கே. ஹல்தரையும், பிரச்சினையை கண்டுகொள்ளாமல் இருக்கும் தமிழக அரசையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. காவல் துறையினரின் பலத்த பாதுகாப்புக்கு இடையே, மறைத்து வைத்திருந்த எஸ்.கே. ஹல்தரின் உருவபொம்மையை எரித்து முழக்கங்கள் எழுப்பினர்.
இதையடுத்து காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
"காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகேதாட்டு அணையைக் கர்நாடகம் கட்டிக் கொள்ளலாம் என்ற தீர்மானத்தை ஆணையத் தலைவர் எஸ்.கே. ஹல்தர் நிறைவேற்றினார். காவிரி மேலாண்மை ஆணையக் கூட்ட நிகழ்ச்சி நிரலில் மேகேதாட்டு அணை குறித்த பொருளை முன்வைத்தால் அக்கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்வதாகக் கூறி, இதுவரை தடுத்து வந்த தமிழக அரசின் நீர்வளத் துறைச்செயலர் பிப்ரவரி 1ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டது ஏன்? என்ற விளக்கத்தை அளிக்கவில்லை.
உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி நீரை 4 மாநிலங்களுக்கும் பகிர்ந்து அளிப்பது மட்டுமே காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் அதிகாரம். கர்நாடகம் புதிய அணையைக் கட்ட அனுமதி தரும் அதிகாரம் காவிரி ஆணையத்துக்கு இல்லை.
இந்நிலையில் ஆணையக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மேகேதாட்டு அணைக்கு ஆதரவான தீர்மானத்தை தமிழ்நாடு அரசு இதுவரை கண்டிக்கவில்லை. இந்த அணைக் கட்டப்பட்டால் தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டுத் தண்ணீர் கூட கிடைக்காது. எனவே காவிரி ஆணையத் தலைவர் பதவியில் இருந்து எஸ்.கே. ஹல்தரை நீக்க வேண்டும். ஆணையக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மேகேதாட்டு அணைக்கு ஆதரவான தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால் எங்களது போராட்டம் தொடரும்
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
போராட்டத்தில் காவிரி உரிமை மீட்புக் குழு பொருளாளர் த. மணிமொழியன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ப. ஜெகதீசன், தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கப் பொதுச் செயலர் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன், தமிழ்த் தேசிய முன்னேற்ற கழகத் தலைவர் த.சு. கார்த்திகேயன், ஐஜேகே மேற்கு மாவட்டத் தலைவர் ச. சிமியோன் சேவியர்ராஜ், தமிழர் தேசியக் களத் தலைவர் ச. கலைச்செல்வம், காவிரி உரிமை மீட்புக் குழு சாமி. கரிகாலன், துரை. இரமேசு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“