காவிரியில் இருந்து தமிழகத்திற்கு உடனே 4 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் : உச்சநீதிமன்றம் உத்தரவு

காவிரி விவகாரத்தில் வரைவு அறிக்கை தாக்கல் செய்யாத மத்திய அரசை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது. மேலும் மே மாதத்திற்கான 4 டிஎம்சி நீரை கர்நாடகம் உடனே திறக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

காவிரி நதிநீர் வழக்கில் 6 வாரக் காலம் அளித்தும் மத்திய அரசு தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. மேலும் இந்த வழக்கில் “ஸ்கீம்” என்ற வார்த்தைக்கு விளக்கம் கோரி மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்தபோது, மே 3ம் தேதிக்குள் காவிரி வரைவு திட்டம் அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றம் காலக்கெடு இன்று முடிவடைந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. முன்பு அளிக்கப்பட்ட உத்தரவை இம்முறையும் பின்பற்ற மத்திய அரசு தவறிவிட்டது.

காவிரி விவகாரத்தில் வரைவு திட்ட அறிக்கையை மத்திய அரசு இன்று தாக்கல் செய்யவில்லை. கர்நாடகாவில் தேர்தல் நடவடிக்கைகள் நடைபெறுவதால் தாமதம் ஆனதாக மத்திய அரசு கூறியுள்ளது. மேலும், “பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்கள் கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வருவதால், காவிரி வரைவு திட்ட அறிக்கை குறித்து ஒப்புதல் பெற முடியவில்லை.” என்று தெரிவித்தனர்.

மத்திய அரசின் இந்தச் செயலுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனத்தைத் தெரிவித்தது. “கர்நாடக அரசியல் பற்றியெல்லாம் எங்களுக்குக் கவலையில்லை. தமிழகத்திற்கு நீரை உடனே திறந்து விட வேண்டும். மே மாதத்தில் 4 டிஎம்சி நீரை தமிழகத்திற்கு உடனே கர்நாடகம் திறந்து விட வேண்டும். இல்லையென்றால் கர்நாடக மாநிலம் கடும் நடவடிக்கையைச் சந்திக்க நேரிடும்.” என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது.

மேலும் இந்த வழக்கு வரும் 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று வழங்கப்பட்ட தீர்ப்பை முறையாக உடனே பின்பற்றுவது மத்திய அரசின் கடமை என்றும் உச்சநீதிமன்றம் காட்டம் தெரிவித்துள்ளது.

தமிழகத்திற்கு இரண்டாவது முறையாக அநீதி இழைத்த மத்திய அரசைக் கண்டித்து பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபடத் துவங்கியுள்ளனர். பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களின் கண்டனத்தை தெரிவித்து வருகிறது.

×Close
×Close