கர்நாடக அரசை காவிரியில் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்த சந்திக்க உள்ளனர்.
தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் விடக்கூடாது என்பதில் கர்நாடக அரசு உறுதியாக உள்ளது. இதனால், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து அரசியல் கட்சி எம்.பி.க்கள் குழு டெல்லியில் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளனர். டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்துள்ள குறுவை பயிர்களை காப்பாற்ற காவிரியில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக எம்.பி.க்கள் குழு மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் வலியுறுத்த உள்ளனர்.
இதனிடையே, செப்டம்பர் 13 முதல் 15 நாட்களுக்கு 5,000 கனஅடி நீர் திறக்க வேண்டும் என்ற காவிரி நீர் ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவை நிறைவேற்ற கர்நாடக அரசு மறுத்ததால், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அவசரக் கூட்டத்தை திங்கள்கிழமை கூட்டியது.
இதைத் தொடர்ந்து, காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையேயான பிரச்சனையை உச்சநீதிமன்றம் செப்டம்பர் 21-ம் தேதி விசாரிக்கிறது.
மத்திய அமைச்சருடனான அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவின் சந்திப்பை அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் கோரிக்கை நியாயமற்றது என்று கர்நாடகா வாதிடுகிறது என்றும், தமிழகம் ஆயக்கட்டுப் பகுதிகளை அதிகரித்துள்ளதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறது என்றும் கூறினார்.
கர்நாடக அரசு, மத்திய ஜல் சக்தி அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், தமிழகத்தில் போதிய நிலத்தடி நீர் உள்ளதாகவும், வடகிழக்கு பருவமழையின் போது மாநிலத்தில் போதிய மழை பெய்யும் என்றும் தவறான தகவல் அளித்துள்ளது. இவை உண்மைக்கு முரணானவை என்பதால், அதைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று தமிழக எம்.பி.க்கள் குழு தனது கோரிக்கை மனுவில் மத்திய அரசை வலியுறுத்தும் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பின்படி, செப்டம்பர் 13 முதல் 15 நாட்களுக்கு கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இயல்பான மழை பெய்யும் என்று காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு மதிப்பிட்டுள்ளதால், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு 12,500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும். மத்திய ஜல் சக்தி அமைச்சர் இது தொடர்பாக கர்நாடகாவுக்கு வழிகாட்டுதல்களை வழங்க காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
காவிரி நீர்ப் பிரச்னை தீர்ப்பாயம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி, காவிரிப் படுகையில் உள்ள கரையோர மாநிலங்கள், நெருக்கடியான ஆண்டில் கிடைக்கும் தண்ணீரை விகித அடிப்படையில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஸ்டாலின் சுட்டிக்காட்டினார். இதன்படி, செப்டம்பர் 14-ம் தேதிக்குள் கர்நாடகா 103.5 டி.எம்.சி தண்ணீர் திறந்துவிட வேண்டும். ஆனால், உண்மையில் 38.4 டி,எம்,சி தண்ணீர்தான் திறந்துவிடப்பட்டுள்ளது, இதனால், 65.1 டி.எம்.சி பற்றாக்குறையாக உள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடகாவால் திறக்கப்படும் நீரை தவிர, வானிலை ஆய்வு மையத்தின் 69.25 டி.எம்.சி சேமிப்பு மற்றும் இயல்பான மழையளவு கணிப்பைக் கருத்தில் கொண்டு ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை பாசனத்திற்காக திறக்கப்பட்டது என்பதை முதல்வர் நினைவு கூர்ந்தார். நிர்ணயிக்கப்பட்ட மாதாந்திர கால அட்டவணையின்படி கர்நாடகா தண்ணீர் திறக்கத் தவறியதாலும், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறை ஆணையம் இப்பிரச்சினையைத் தீர்க்க முடியாததாலும், ஆகஸ்ட் 14-ம் தேதி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது.
இந்நிலையில், கர்நாடக அரசை காவிரியில் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்த சந்திக்க உள்ளது கவனத்தைப் பெற்றுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.