scorecardresearch

திருச்சி- கல்லணை சாலையில் வெள்ளம்: 1000 ஏக்கர் நெல், வாழை சேதம்

திருச்சி-கல்லணை சாலையில் உத்தமர்சீலி தரைப்பாலம் மூழ்கி வெள்ள நீர் விவசாய நிலங்களுக்குள் ஓடுவதால் உத்தமர்சீலி, திருவளர்சோலை உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த சுமார் ஆயிரம் ஏக்கருக்கு மேலான வாழை, கரும்பு, நெல் பயிர்கள் சேதம் அடைந்துள்ளது.

திருச்சி- கல்லணை சாலையில் வெள்ளம்: 1000 ஏக்கர் நெல், வாழை சேதம்

க.சண்முகவடிவேல்

கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 2 லட்சம் கனஅடியாக உயர்ந்தது. மேட்டூரில் இருந்து 16 கண் மதகுகள் வழியாக மேட்டூருக்கு வரும் நீர் அப்படியே காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், நேற்று (ஆகஸ்ட் 3) நள்ளிரவு திருச்சி முக்கொம்பு அணைக்கு 1 லட்சம் கனஅடிக்கு மேற்பட்ட தண்ணீர் வந்ததையடுத்து நள்ளிரவு மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் முக்கொம்பு சென்று ஆய்வு செய்தார்.

திருச்சி முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரியில் 50 ஆயிரம் கன அடி நீரும், கொள்ளிடம் ஆற்றில் 85 ஆயிரம் கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. இதனால், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் படிக்கட்டுகள் மூழ்கி வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன்காரணமாக, ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறை மூடப்படதோடு, பொதுமக்கள் வேடிக்கை பார்க்கவோ, குளிக்கவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை (ஆகஸ்ட் 3) ஆடிப்பெருக்கு திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையில் ஆயிரக்கணக்கான திருமணமான பெண்கள், புதுமண தம்பதியர்கள் ஒன்று கூடி வழிபாடு நடத்திய நிலையில் இன்று படிக்கட்டுகள் முழுவதும் மூழ்கி கடல்போல் காட்சியளிக்கிறது.

இதேபோல் கொள்ளிடம் ஆற்றில் 85 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கொள்ளிடம் கரையில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், திருச்சி-கல்லணை சாலையில் உத்தமர்சீலி தரைப்பாலம் மூழ்கி வெள்ள நீர் விவசாய நிலங்களுக்குள் ஓடுவதால் உத்தமர்சீலி, திருவளர்சோலை உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த சுமார் ஆயிரம் ஏக்கருக்கு மேலான வாழை, கரும்பு, நெல் மற்றும் பிச்சிப்பூ ஆகியவவை வெள்ள நீரில் மூழ்கி வயல்கள்கூட ஆறு போல காட்சியளிக்கிறது.

உத்தமர்சீலி தரைப்பாலம் மூழ்கியதால் இன்று (ஆகஸ்ட் 4) காலை பள்ளி – கல்லூரி, வேலைக்கு செல்வோர் கல்லணை பகுதியில் இருந்து திருச்சிக்கு வருபவர்கள், இங்கிருந்து அங்கே செல்லக்கூடியவர்களின் இயல்பு போக்குவரத்து பாதிப்படைந்தது. அபாயத்தை உணராமல் தரைப்பாலத்தில் இருசக்கர வாகனங்கள் கடந்து செல்லும் பொழுது பழுது ஏற்பட்டு ஆங்காங்கே தள்ளிச் செல்லும் நிலையை காணமுடிந்தது.

விவசாயிகள் தங்களின் ஆறு மாத வாழை பயிர் நீரில் மூழ்குவதைத் தடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர். வெள்ளத்தில் பயிர்கள் மூழ்கி பயிர்கள் சேதமடைந்துள்ளதைப் பார்க்க இதுவரை அதிகாரிகள் வரவில்லை என்ற குற்றச்சாட்டை விவசாயிகள் முன்வைக்கின்றனர். உடனடியாக தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர்.

உத்தமர்சீலி ஊராட்சி தரைப்பாலத்தில் பொதுமக்கள் மற்றும் ஆடு, மாடு உள்ளிட்டவைகளை அழைத்து செல்லக்கூடாது என்று அறிவிப்பு பலகை வைத்து எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி, சிறு குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் வைத்துக் கொண்டு செல்வதும், சிறுவர்கள் தண்ணீரில் கடப்பதும் பார்க்க முடிந்தது.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளாகத்தான் ஜூன்-ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் காவிரியில் தண்ணீர் கரை புரண்டோடுகிறது. இந்த நீரோட்டம் மகிழ்ச்சியை கொடுத்தாலும் அதிகாரிகளின் மெத்தனப் போக்கு பெருத்த வேதனையை கொடுத்திருக்கின்றது.

லட்சக்கணக்கான உபரிநீர் யாருக்கும் பிரயோசனம் இல்லாமல் கடலில் கலப்பது ஒருபக்கம் இருந்தாலும், ஆங்காங்கே கரைகள் பலப்படுத்தாதனால் வெள்ள நீர் ஊருக்குள் வந்து விடுகிறது.

திருச்சி-கல்லணை சாலையில் காவிரி ஆற்றங்கரையையொட்டி செல்லும் தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் வயல்வெளிகளில் தண்ணீர் புகுந்தது. இதனால், திருப்பஞ்சீலி, திருவெள்ளரை பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்த வாழை, பூச்செடிகள், கரும்பு பயிர்கள் நாசமானது.

இந்த தரைப்பாலத்திற்கு பதில் ஒரு மேம்பாலம் இந்த சாலையில் அமைத்து கொடுத்தால் பொதுமக்கள் எந்தவித அச்சமும் இன்றி கடந்து செல்ல உதவியாக இருக்கும். அவ்வப்போது வெள்ளம் ஏற்படும்போது இப்படி தண்ணீர் உள்ளே வருவதை தடுக்க காவிரியின் கரையை உயர்த்தி கொடுக்க வேண்டும். பல ஆண்டுகளாக இந்தக்கோரிக்கை கிடப்பில் போடப்பட்டிருப்பதால் விவசாயிகளுக்கு வெள்ள நீர் உள்ளே வரும்போதெல்லாம் பாதிப்பு ஏற்படுகின்றது. இதுவரை எந்தளவு பாதிப்பு என்பதைக்கூட அதிகாரிகள் வந்து பார்த்துச்செல்லாதது பெரும் வேதனை” என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Cauvery floods in trichy kallanai road thousands acre paddy crop banana trees damaged

Best of Express