“கால்வாய் வெட்டி நம்ம ஊருக்கு காவேரியை கொண்டுவரப் போகிறோம்; இனிமேல் தண்ணீர் பிரச்னையே இருக்காது” என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், 4 மாதங்களுக்கு முன்னதாகவே தனது விறாலிமலை தொகுதி மக்களிடம் உற்சாகமாக பேசி வியப்பில் ஆழ்த்தினார். அமைச்சரின் இந்த பேச்சை கேட்ட பலரும் முதலில் ஆச்சரியத்துடன்தான் எதிர்கொண்டார்கள். காவேரியை திருச்சியில் இருந்து புதுக்கோட்டை மாவட்டத்துக்கு கொண்டுவர முடியுமா? என்றும் மக்கள் மத்தியில் கேள்வி எழுந்தது.
விஜயபாஸ்கர் மக்களிடையே கூறிய அந்த திட்டம்தான் காவிரி – குண்டாறு இணைப்பு திட்டம். இது விவசாயிகளின்100 ஆண்டு கனவு என்று கூறப்படுகிறது. முதல்வர் பழனிசாமி இன்று ரூ.6,941 கோடி மதிப்பில் காவேரி – தெற்கு வெள்ளாறு – வைகை – குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தின் முதல் கட்டத்திற்கும், ரூ.3,384 கோடி மதிப்பில் விரிவாக்கம், புனரமைத்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் காவேரி உபவடிநிலத்தில் உள்ள நீர்ப்பாசன உள்கட்டமைப்புகளை புனரமைக்கும் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
இவ்வளவு பெரிய தொகையில் தொடங்கப்படும் இந்த திட்டத்தால் புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டம் பயண்பெறும் என்று கூறுகிறார்கள்.
வெள்ளக் காலங்களில் காவேரியில் உபரியாக வெளியேறும் நீரை கரூர் மாவட்டம், மாயனூர் தடுப்பணையிலிருந்து திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய
மாவட்டங்களின் வறண்ட பகுதிகள் வழியாக குண்டாற்றுடன் இணைப்பதன் மூலமாக இப்பகுதி
மக்களின் நூற்றாண்டு கால கனவு நிறைவேற்றப்படுகிறது என்று ஆளும் அதிமுக அரசு பெருமையாக கூறுகிறது.
காவேரி – தெற்கு வெள்ளாறு – வைகை – குண்டாறு இணைப்பு திட்டம் நன்மைகள்:
காவேரி – தெற்கு வெள்ளாறு – வைகை – குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்தின் விவரங்களையும் அதனால், ஏற்பட உள்ள நன்மைகளையும் தமிழக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
ரூ.6,941 கோடி மதிப்பிலான முதல் கட்டத்திற்கு தற்பொழுது அடிக்கல் நாட்டப்படுகிறது. இதன்மூலம் கரூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் 342 ஏரிகளும், 42,170 ஏக்கர் நிலங்களும் பயன்பெறும் வகையில் 118.45 கி.மீ நீளத்திற்கு கட்டளைக் கால்வாயிலிருந்து கால்வாய் வெட்டப்பட்டு புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு வெள்ளாற்றுடன் இணைக்கப்படுகிறது.
இரண்டாவது கட்டமாக, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 220 ஏரிகளும், 23,245 ஏக்கர் நிலங்களும் பயன்பெறும் வகையில் தெற்கு வெள்ளாற்றிலிருந்து 109 கி.மீ நீளத்திற்கு கால்வாய் உருவாக்கி வைகையுடன் இணைக்கப்படுகிறது.
மூன்றாவது கட்டத்தில், விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் 492 ஏரிகள் மற்றும் 44,547 ஏக்கர் நிலங்களும் பயன் பெறும் வகையில் 34 கி.மீ நீளத்திற்கு கால்வாய் வெட்டி வைகை முதல் குண்டாறு வரை இணைக்கப்படுகிறது. ரூ.14,400 கோடியில் 262 கி.மீ தூரத்திற்கு நிறைவேற்றப்படவுள்ள இத்திட்டத்தின் மூலம் வெள்ளக் காலங்களில் வீணாகும் 6,300 கனஅடி தண்ணீர் ஆக்கப்பூர்வமாக திருப்பப்படுவதால் தென் மாவட்டங்களில் நிலத்தடி நீர்
அதிகரிப்பதோடு, குடிநீர் தேவையும் பூர்த்தியாகும்.
காவேரி உப வடிநிலத்திலுள்ள உள்கட்டமைப்புகளில் விரிவாக்கம், புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் புனரமைக்கும் பணிகள் ரூ.3,384 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும்
மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 987 கி.மீ நீளமுள்ள 21 ஆறுகளின் மொத்த பாசன பரப்பான 4,67,345 ஏக்கர் நிலங்கள் பாசனம் உறுதி செய்யப்படும்.
மேலும், காவேரி டெல்டாவிலுள்ள பழமை மிக்க பாசன கட்டுமானங்கள் ஸ்காடா தொழில்நுட்பம் (SCADA) மூலம் ரூ.72 கோடி மதிப்பில் தானியங்கி அமைப்புகள் நிறுவப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் காவேரி உப வடிநில கால்வாய்களின் பாசனத்திறன் 20 சதவீதம் அதிகரிக்கப்படும்.
உண்மையில் காவேரி திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்கு வரும் நாளை புதுக்கோட்டை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.