காவிரி வழக்கில் சுமார் 11 ஆண்டுகளுக்கு பின்பு, முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்
தலைமை செயலகத்தில் நடந்து வருகிறது.
2007 ம் ஆண்டு காவிரி நடுவர்மன்றம் வழங்கிய தீர்ப்பில், தமிழகத்திற்கு 192 டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தன. இந்த வழக்கில், கடந்த 16ம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படி, தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும். தமிழகத்திற்கு ஏற்கனவே திறக்கப்பட்டு வந்த 14.75 டிஎம்சி குறைக்கப்பட்டது. இந்த 14.75 டிஎம்சி தண்ணீர் கர்நாடகாவுக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி இதுவரை ஆண்டிற்கு, தமிழகத்திற்கு 492 டிஎம்சி தண்ணீர் ஒதுக்கீடு செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி, இனி தமிழகத்திற்கு ஆண்டிற்கு 404.1 டிஎம்சி மட்டுமே கிடைக்கும். இந்த தீர்ப்புக்கு கர்நாடகம் வரவேற்பு தெரிவித்த நிலையில், தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.
இந்த நிலையில், காவிரி விவகாரம் குறித்து கடந்த 19ம் தேதி முதல்வர் பழனிசாமி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், வரும் 22ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. காவிரி விவகாரத்தில் அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.
தமிழக அரசின் இந்த முடிவிற்கு வரவேற்புத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், "காவிரி நீர் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்பதோடு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளையும் அதில் பங்கேற்க அழைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்" என வேண்டுகோள் விடுத்தார்.
இதைத் தொடர்ந்து, காவிரி தொடர்பாக நாளை நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு விவசாயிகளையும் அழைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் உள்ள விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளை அழைக்க அரசு முடிவுசெய்துள்ளது. இன்று காலை 10 மணியளவில் தலைமை செயலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறகிறது.