தமிழ்நாட்டுக்கு ஆண்டு தோறும் 177.25 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், தண்ணீர் திறப்பை உறுதி செய்ய மத்திய அரசு 6 வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அந்த காலக்கெடு மார்ச் மாதம் 30ம் தேதியோடு முடிந்தது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான எந்த முயற்சியையும் மத்திய அரசு எடுக்கவில்லை.
இதைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில் 'ஸ்கீம்' என்றால் என்ன? என்று விளக்கம் கேட்டது. மேலும் தீர்ப்பை அமல்படுத்த 3 மாதம் அவகாசம் கேட்டது.
இதற்கிடையே, உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு அமல்படுத்தாததால், மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டது.
தமிழக அரசு தாக்கல் செய்த அந்த மனுவில், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தாமதம் செய்வதால் காவிரி டெல்டா பாசன பகுதியில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டது. மேலும் சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்தாமல் இருப்பது நீதிமன்ற அவமதிப்புக்குரியது என்றும் குறிப்பிட்டு இருந்தது..
இந்த நிலையில், இந்நிலையில், தமிழக அரசு தொடர்ந்த வழக்கை இன்றே விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏப்ரல் 9-ம் தேதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
‘காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் நிலையை புரிந்துகொள்ள முடிகிறது. தமிழகத்திற்கு உரிய நீர் நிச்சயம் கிடைக்கும். தீர்ப்பில் உள்ள ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை வாரியத்தை மட்டும் குறிக்காது. காவிரி பிரச்சினையில் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதுதான் ஸ்கீம்’ என்றும் தலைமை நீதிபதி கூறினார்.