சென்னையில் திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டிகள் நடக்கும் என ஐபிஎல் சேர்மேன் ராஜீவ் சுக்லா இன்று டெல்லியில் அறிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணி இரு ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் களத்தில் குதித்திருக்கிறது. அந்த அணி மும்பையில் நடந்த முதல் ஆட்டத்தில் மும்பையை வீழ்த்தியிருக்கிறது. சி.எஸ்.கே. அணியின் 2-வது போட்டி ஏப்ரல் 10-ம் தேதி (செவ்வாய்கிழமை) சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இந்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சி.எஸ்.கே. எதிர்கொள்கிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழ்நாட்டில் போராட்டம் வலுப்பெற்று வரும் வேளையில் சென்னையில் கிரிக்கெட் கேளிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என போராட்ட அமைப்புகள் வேண்டுகோள் வைத்தன. ஆனால் மத்திய-மாநில அரசுகளோ, ஐபிஎல் நிர்வாகமோ இதைக் கண்டுகொள்ளவில்லை. இதற்கான பதிலைக்கூட ஐபிஎல் நிர்வாகம் தெரிவிக்கவில்லை.
ஐபிஎல் தொடரின் சென்னை போட்டிகளை மட்டும் திருவனந்தபுரத்திற்கு மாற்ற இருப்பதாக இரு தினங்களுக்கு முன்பு ஒரு தகவல் வெளியானது. கேரள மாநில கிரிக்கெட் சங்கம் இதற்கு ஒப்புதல் வழங்கியதாகவும் தகவல்கள் வந்தன. ஆனால் திடீரென தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும், ஐபிஎல் நிர்வாகமும் சென்னையிலேயே இந்தப் போட்டியை நடத்துவது என்கிற முடிவுக்கு வந்துவிட்டன. ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா இதை அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், "சென்னையில் இருந்து ஐபிஎல் போட்டிகள் மாற்றப்படாது. மாற்றும் எண்ணமும் இல்லை. ஐபிஎல்லை அரசியல் ஆக்க வேண்டாம்" என்றார்.
காவிரி பிரச்னைக்காக போராடும் அமைப்புகளை ஐபிஎல் நிர்வாகத்தின் இந்த முடிவு அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. எனவே ஐபிஎல் போட்டிக்கு எதிராக போட்டி நடைபெறும் தினமான ஏப்ரல் 10-ம் தேதி (செவ்வாய்கிழமை) மாலையில் சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த பல்வேறு கட்சிகளும் அமைப்புகள் முடிவு செய்திருக்கின்றன.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஏப்ரல் 10-ம் தேதி மாலை 3 மணிக்கு சேப்பாக்கம் ஸ்டேடியத்தை முற்றுகையிட முடிவு செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரான வேல்முருகன், ‘முற்றுகைப் போராட்டம் மட்டுமல்ல, ரசிகர்கள் போலவே எங்கள் தொண்டர்களும் கிரிக்கெட் போட்டியைக் காண டிக்கெட் எடுத்து வைத்திருக்கிறார்கள். போட்டி நடைபெறும்போது மைதானத்தின் உள்ளேயே அவர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பார்கள்’ என்றார்.
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானும், சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்திருக்கிறார். மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி வெளியிட்ட அறிவிப்பில், ‘எதிர்ப்பை மீறி சென்னையில் ஐபிஎல் நடத்தினால், வீரர்களை சிறை பிடிப்போம்’ என ஏற்கனவே அறிவித்தார். எனவே அவரது அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
செவ்வாய்கிழமை சென்னையில் பதற்றத்திற்கும் பரபரப்புக்கும் இடையே ஐபிஎல் போட்டி நடைபெற இருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.