காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இன்று தலைமைச் செயலாளருடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதி உத்தரவு! உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவிலும், 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசு தரப்பில் கூறப்பட்டது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக டெல்லியில் நேற்று (மார்ச் 9) 4 மாநில தலைமைச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திய மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள், ‘காவிரி நடுவர் மன்றத்தை செயல்படுத்துவது குறித்து ‘ஸ்கீம்’ (செயல் திட்டம்) தயாற் செய்யும்படிதான் உச்சநீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டிருக்கிறது. மேலாண்மை வாரியம் அமைக்கும்படி உத்தரவில் கூறப்படவில்லை’ என கூறியிருக்கிறார்.
காவிரி மேலாண்மை வாரியத்தை எதிர்பார்த்திருந்த தமிழக விவசாயிகளுக்கு இது பலத்த அதிர்ச்சி! இதைத் தொடர்ந்து திமுக, மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன. ‘காவிரி நடுவர் மன்ற இறுதி உத்தரவை செயல்படுத்துங்கள்’ என உச்ச நீதிமன்றம் கூறினாலே, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க கூறியதாகத்தான் அர்த்தம் என தமிழ்நாடு அரசு சார்பில் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில் நேற்று டெல்லி கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழ்நாடு பொதுப்பணித்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியன் ஆகியோருடன் இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். டெல்லி கூட்டத்தில் பேசப்பட்ட விஷயங்கள் குறித்து கேட்டறிந்தார் அவர்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமுல் செய்வது தொடர்பாக எழுத்துபூர்வமான பதிலை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கேட்டிருக்கிறார்கள். அந்தப் பதிலை தயார் செய்வது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. விரைவில் இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் அறிக்கை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்படும் என தெரிகிறது.