காவிரி வழக்கில் மத்திய அரசின் வரைவு செயல் திட்டம் : வாரியமா, குழுவா, ஆணையமா? என்பதை உச்ச நீதிமன்றம் முடிவு செய்யும்!

காவிரி வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த 14 பக்க அறிக்கையை தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களுக்கும் வழங்க உச்ச நீதிமன்றம்...

காவிரி வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த வரைவு திட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசு வரவேற்பு தெரிவித்தது. ஆனால் விவசாய சங்கங்கள் கலவையாக கருத்து தெரிவிக்கின்றன.

காவிரி வழக்கில் மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் இன்று (மே 14) உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி மத்திய அரசின் வரைவு அறிக்கையை தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை மே 16-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்திருக்கிறது.

காவிரி வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்திருக்கும் அறிக்கையில், ‘காவிரி மேலாண்மை வாரியத்திற்கு இணையான குழு அமைக்க’ மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்திருக்கிறது. இது தமிழ்நாடு அரசு நடத்திய சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் வரவேற்பு தெரிவித்தார்.

காவிரி வழக்கில் மத்திய அரசின் வரைவு அறிக்கை தொடர்பான LIVE UPDATES இங்கே!

பிற்பகல் 2.30 : ‘காவிரி தொடர்பான குழுவின் தலைமையகம் பெங்களூருவில் அமையும்’ என வரைவு அறிக்கையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பிற்பகல் 2.20 : திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், ‘காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிகள், விவசாய அமைப்புகளின் கூட்டத்தை தமிழக அரசு நாளையே கூட்ட வேண்டும். இந்த அனைத்துக் கட்சி கூட்டம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், அதனை சட்டரீதியாக செயல்படுத்துவதை வலியுறுத்தும் வகையிலும் அமையவேண்டும்’ என்றார்.

பிற்பகல் 2.15 : ‘மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் அணைகள் இருக்கும். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடக அரசு தண்ணீர் வழங்குகிறதா என்பதை காவிரி தொடர்பான குழு மேற்பார்வை செய்யும்’ என மத்திய நீர்வளத்துறை செயலாளர்ர் யு.பி.சிங் கூறினார்.

பிற்பகல் 2.15 : வரைவு அறிக்கையில், ‘குழுவின் அடிப்படை பணிகளுக்கு முதற்கட்டமாக மத்திய அரசு ரூ.2 கோடி வழங்கும். குழுவின் நிர்வாக செலவு மற்றும் உறுப்பினர்களின் சம்பளத்திற்கு மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும்’ என கூறப்பட்டிருக்கிறது.

பிற்பகல் 2.00 : மத்திய அரசின் வரைவு அறிக்கையில், ‘குழுவில் உள்ள பெரும்பான்மை உறுப்பினர்களின் பரிந்துரையின் பேரில் அணைகளில் நீர் திறக்கப்படும். காவிரி படுகையில் உள்ள அனைத்து அணைகளும் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கும்’ என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பகல் 1.45 : ‘காவிரி வழக்கில் தமிழகத்திற்கு நாளை மறுநாள் நல்ல தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கிறேன்’ என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

பகல் 1.40 : காவிரி பிரச்னை தொடர்பாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் 17-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற இருக்கிறது. நாளை நடக்கவிருந்த அனைத்துக் கட்சி கூட்டம், 17-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பகல் 1.35 : ‘வரைவு செயல் திட்டத்தை முழுமையாக படித்த பின்பு அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும். வரைவு அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்ததே தமிழ்நாடு அரசுக்கு கிடைத்த வெற்றிதான். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்தும் கடமை மத்திய அரசுக்கு உள்ளது. தமிழக உரிமைகளை காப்பாற்ற இறுதி வரை போராடுவோம்’ என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

பகல் 1.30 : ‘காவிரி மேலாண்மை வாரியம் தவிர, வேறு எதையும் ஏற்க முடியாது. பெயரில் ஒன்றுமில்லை என தமிழ்நாடு சட்ட அமைச்சர் கூறுவது தமிழ்நாட்டுக்கு செய்யும் துரோகம்’ என அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

பகல் 1.20 : காவிரி விவகாரம் தொடர்பாக மே 19-ம் தேதி சென்னையில் நல்லக்கண்ணு தலைமையில் அனைத்து தரப்பு நிபுணர்களுடன் விவாதம் நடத்த இருப்பதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறினார். தமிழகம் படிப்படியாக அதன் உரிமைகளை இழந்துவருவதாகவும் கமல்ஹாசன் கூறினார்.

பகல் 1.15 : ‘தண்ணீரை திறந்துவிடும் அதிகாரம், மத்திய அரசு பரிந்துரைக்கும் குழுவுக்கு இல்லை என்றால் எதிர்ப்போம்’ என தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

பகல் 1.10 : வரைவு அறிக்கையில், ‘உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் அனைத்து அதிகாரங்களும் இந்த குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. நீர் திறப்பு காலங்களில் மாநில அரசுகளுடன் இணைந்து இந்த குழு முடிவு எடுக்கும்’ என மத்திய அரசு கூறியிருக்கிறது.

பகல் 1.00 : வரைவு அறிக்கையில், ‘காவிரி பிரச்னை தொடர்பான அமைப்பில் தலைவர் உட்பட 10 பேர் இடம் பெறுவர். குழுவில் தலைவர், மத்திய அரசு அதிகாரிகள் 5 பேர், மாநில பிரதிநிதிகள் 4 பேர் இடம்பெறுவர். காவிரி தொடர்பான அமைப்பின் தலைவர், 5 ஆண்டுகள் பதவியில் நீடிக்க முடியும்’ என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பகல் 12.50 : ‘காவிரி மேலாண்மை வாரியம் என்று அமைக்கப்படுகிறதோ அன்று தான் வெற்றி. காவிரி விவகாரத்தில் இன்னும் தெளிவான முடிவு கிடைக்கவில்லை. மத்திய, மாநில அரசுகள் தமிழக மக்களை குழப்பத்திலேயே வைத்துள்ளன’ என திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி கூறினார்.

பகல் 12.45 : ‘காவிரி தொடர்பான அமைப்பு அதிகாரமிக்க குழுவாக இருக்குமா? என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்’ என காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார்.

பகல் 12.30 : மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கையில், ‘காவிரி வரைவு செயல் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய பின் அரசிதழில் வெளியிடப்படும். காவிரி வாரியமா, குழுவா, ஆணையமா என்பது குறித்து உச்சநீதிமன்றம் அறிவுறுத்த வேண்டும்’ என கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

பகல் 12.15 : ‘தமிழக அரசு எடுத்த சட்ட நடவடிக்கையால், வரைவு செயல் திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. வரைவு செயல் திட்டத்தின் குறை, நிறைகளை ஆராய்ந்து, நாளை மறுநாள் பதில் மனு தாக்கல் செய்யப்படும்’ என தமிழ்நாடு சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

பகல் 12.00 : காவிரி வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த 14 பக்க அறிக்கையை தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களுக்கும் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 4 மாநிலங்களும் இதில் தங்கள் கருத்தை மே 16-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கும். அதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் இறுதி உத்தரவை பிறப்பிக்கும் என தெரிகிறது.

பகல் 11.45 : காவிரி வழக்கில் வரைவு செயல் திட்ட அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்தது. மத்திய நீர் வளத்துறை செயலாளர் யூ.பி சிங் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வரைவு திட்டத்தை தாக்கல் செய்தார்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close