காவிரி பிரச்னையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவேண்டும் என எடப்பாடி பழனிசாமியிடம் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.
காவிரி பிரச்னை குறித்து பிப்ரவரி 22-ம் தேதி தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தியது. அதில் பிரதமரை சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முறையிடுவது என தீர்மானிக்கப்பட்டது. ஆனால் பிரதமரின் ‘அப்பாய்ன்மென்ட்’ கிடைக்கவில்லை. எனவே எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை நேற்று (மார்ச் 3) தலைமைச் செயலகத்திற்கு அழைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
காவிரி பிரச்னை உள்ளிட்ட சில பிரச்னைகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன் எம்.பி., அ. சவுந்தரராசன், உ. வாசுகி ஆகியோரும் நேற்று (03.03.2018) தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து பேசினர்.
காவிரி பிரச்சனை தொடர்பாகவும், ஆந்திராவில் தமிழக தொழிலாளர்கள் கொலை செய்யப்படுவது மற்றும் சில பிரச்சனைகளில் தலையிட வலியுறுத்தியும் கடிதம் வழங்கினர். சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது :
காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை 6 வாரங்களுக்குள் மத்திய அரசு அமைத்திட வேண்டுமென உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதுகுறித்து மத்திய அரசை வலியுறுத்திட அனைத்துக் கட்சி தலைவர்கள், விவசாய சங்கத் தலைவர்கள் மற்றும் தமிழ்நாட்டைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்துவதென முடிவு செய்யப்பட்டது. ஆனால், இதுவரை பிரதமரை நேரில் சந்திப்பதற்கான நேரம் ஒதுக்கித் தரவில்லை எனத் தெரிகிறது.
இந்நிலையில் தமிழகத்திற்கு வந்திருந்த மத்திய நீர்வள ஆதாரத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, ‘காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பது இப்போதைக்கு சாத்தியமில்லை’ என கருத்து வெளியிட்டுள்ளார். காவிரி பிரச்சனையில் கடந்த காலங்களில் மத்திய அரசு கடைபிடித்து வரும் தமிழகத்திற்கு எதிரான அணுகுமுறையில் எந்த மாற்றமுமும் இல்லை என்பது தமிழக நலனுக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கும் விரோதமானதாகும்.
தமிழக அரசு இவ்விசயத்தில் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி அடுத்தகட்ட நடவடிக்கையை தீர்மானிக்க வேண்டும், சட்டமன்றத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்றுவது, மேலும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுப்பது உள்ளிட்ட சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வரிடம் வலியுறுத்தினோம்.
அதே போல, மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் சென்ற ஆய்வுக் குழுக்கள் சேகரித்த விபரங்களை கடிதமாகக் கொடுத்தோம். அதில் சேலம் மாவட்டம், கல்வராயன் மலை உள்ளிட்டு வசிக்கும் பழங்குடி மக்கள் ஆந்திராவிற்கு கூலித் தொழிலாளர்களாக அழைத்துச் செல்லப்பட்டு, சந்தேக மரணமடைவது, போலீசாரால் அடித்துகொல்லப்படுவது தடுத்து நிறுத்தப்படவேண்டும்.
சமீபத்தில் 5 தொழிலாளர்கள் கொல்லப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்கு உறவினர்களை அழைக்காமல், அவசரமாக உடல்களை புதைத்த விசயத்தில், மத்திய புலனாய்வுத்துறை விசாரணை வேண்டும். மரணமடைந்த குடும்பத்தாருக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை ஆகியவற்றை வலியுறுத்தினோம். மேலும் பழங்குடி மக்கள் வாழ்க்கை மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளை குறிப்பிட்டுள்ளோம்.
அதே போல விழுப்புரம் மாவட்டத்தில் சமீபத்தில் தலித் மற்றும் பெண்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துவருகின்றன, கொலைகள் மற்றும் பாலியல் வல்லுறவுக் குற்றங்களைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தினோம். குறிப்பாக, வெள்ளம்புத்தூர் கிராமத்தில் நடந்துள்ள கொலை, பாலியல் வல்லுறவுக் குற்றங்கள் சில மோசமான சமூக விரோதிகளின் வன்ம செயலாக உள்ளது. வசந்தகிருஷ்ணாபுரம் கிராமத்தில் நடந்த இளைஞர் படுகொலை சம்பவமும் காவல்துறையினரின் கூற்றுப்படி விபத்தாக கருத முடியவில்லை.
எனவே இச்சம்பவங்கள் குறித்து உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து தண்டனை வழங்கிட சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினோம். தாக்குதலில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி காவல்துறை வழக்குப் பதிவு செய்திட வேண்டும். மாவட்டத்தில் தீண்டாமைக் கொடுமைக்கு முடிவுகட்டும் அதே சமயம் சமூகத்தில் நல்லிணக்கம் வளர்ந்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அதே போல காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகில் உள்ள பாலேஸ்வரம் ஊராட்சியில் அமைந்துள்ள கருணை இல்லம் 2017 செப்டம்பருக்குப் பிறகு அவர்களின் அனுமதி புதுப்பிக்கப்படாமலேயே 5 மாதங்களாக செயல்பட்டு வந்துள்ளனர். இங்கு இறந்துள்ளவர்கள் சம்பந்தமான இறப்பு பதிவு மேற்கொள்ளப்படவில்லை. உரிய தகவல்களும் வருவாய் மற்றும் உள்ளாட்சித்துறைக்கு தெரிவிக்கப்படவில்லை.
மனநலம் குன்றியவர்களை வைத்துப் பராமரிக்க தனியாகப்பதிவு செய்து கொள்ளவில்லை. மனநலம் குன்றியவர்களும், இதரரும் ஒரே இடத்தில் வைக்கப்படுகின்றனர். குடும்பத்தாருக்குத் தகவல் தெரிவிக்காமலும், சம்பந்தப்பட்டவர்களின் விருப்பம் இல்லாமலும் முதியோரும், மனநலம் குன்றியவர்களும் கட்டாயமாக அழைத்து வரப்பட்டு தங்க வைக்கப்படுகின்றனர்.
உயர்மட்ட விசாரணை நடத்தி, மேற்கூறிய முறைகேடுகள் மற்றும் மனித உரிமை மீறல்களில் சம்பந்தப்பட்டிருக்கும் நிறுவன பொறுப்பாளர்கள் மீது வழக்கு பதிவு செய்திட வேண்டும். முறையாகக் கண்காணிக்காத சமூக நலத்துறை உள்ளிட்ட மாவட்ட நிர்வாக அதிகாரிகளின் மீது உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும். தமிழகமெங்கும் உள்ள முதியோர் இல்லம், மனநலம் குன்றியோர் இல்லங்களில் ஆய்வு நடத்தி ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளோம்.
மத்திய அரசு தனியார்மய நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. அதில் ஒரு பகுதியாக சேலம் உருக்காலையை தனியாரிடம் ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ளது. அதனைத் தவிர்க்கும் வகையில், சேலம் உருக்காலை பொதுத்துறை நிறுவனத்தை தனியாரிடம் ஒப்படைப்பதை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இந்த நடவடிக்கையை தடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினோம். இவ்வாறு கூறினர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.