காவிரி மேலாண்மை ஆணையம் 5,000 கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட்ட நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்ததார்.
காவிரியில் நீர் திறக்க கர்நாடக மறுப்பதால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு. காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் வாதிட உள்ளோம். காவிரி ஆணையம் நாங்கள் சொல்வதை ஏற்காமல் ஒழுங்காற்று குழு சொல்வதை ஏற்றுள்ளது எனவும் துரைமுருகன் குற்றஞ்சாட்டினார்.
காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இறுதி தீர்ப்பின்படி வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடகா அரசு வழங்கவில்லை என உச்ச நீதிமன்றத்தை தமிழ்நாடு அரசு நாடியது. இது குறித்து காவிரி மேலாண்மை ஆணையம் ஆலோசனை நடத்தி பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு செப்டம்பர் ஒன்றாம் தேதிக்கு வழக்கை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
24,000 கனஅடி நீர் கோரும் தமிழ்நாடு
தொடர்ந்து இரு தினங்களுக்கு முன் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில், தமிழ்நாடு சார்பில் பங்கேற்ற அதிகாரிகள், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி ஆகஸ்ட் மாதம் வழங்க வேண்டிய நீரில் இன்னும் 54 டி.எம்.சி வழங்கப்படவில்லை என்று முறையிட்டனர்.
தமிழ்நாட்டில் குறுவை சாகுபடி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதால், அடுத்த 15 நாட்களுக்கு 24,000 கனஅடி நீர் திறக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த கர்நாடக அதிகாரிகள், 3,000 கனஅடி மட்டுமே தண்ணீர் திறந்துவிட முடியும் எனக் கூறினர்.
5,000 கனஅடி நீர் திறக்க உத்தரவு
இந்நிலையில், டெல்லியில் ஹல்தர் தலைமையில் காவிரி மேலாண்மை ஆணையக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் சுப்பிரமணியம் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் பங்கேற்றனர். அதேபோல கர்நாடகாவை சேர்ந்த அதிகாரிகள் காணொலி வாயிலாக பங்கேற்றனர். ஆலோசனைக்கு பிறகு, அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 5,000 கனஅடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதே சமயம், காவிரி மேலாண்மை உத்தரவிட்டுள்ள தண்ணீர் சம்பா சாகுபடிக்கு போதாது என தமிழ்நாடு விவசாயிகள் தெரிவித்துள்ளனர். வினாடிக்கு 18,000 கனஅடி தண்ணீரில் இருந்து 24,000 கனஅடி வரை தண்ணீர் திறந்தால் மட்டுமே பயிர்களை காப்பாற்ற முடியும் என்றும் கவலை தெரிவித்தனர்.
இதனிடையே இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள கர்நாடகா அரசு , தங்கள் அணைகளுக்கு போதிய நீர் வரத்து இல்லாததால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என காவிரி மேலாண் ஆணைய கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து சென்னை கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், "காவிரியில் 24,000 டி.எம்.சி தண்ணீர் கேட்டு தர மறுப்பதால், உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவதை தவிர வேறு வழியில்லை என்றும், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தாங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ளவில்லை" எனவும் அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.