காவிரியில் தண்ணீரை தர மறுக்கும் கர்நாடக அரசிற்கு மின்சாரத்தை வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி நவம்பர் 15-ல் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என காவிரி விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் அவசரக் கூட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: ’தமிழ்நாட்டில் காவிரி டெல்டாவில் குறுவை 5 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு 3.50 லட்சம் ஏக்கரில் பாதிக்கப்பட்டுள்ளது.
அனைத்து விவசாயிகளுக்கும் முறையான கணக்கெடுப்பு நடத்தி ஏக்கர் 1 க்கு ரூ 35 ஆயிரம் நிவாரணம் வழங்கிட வேண்டும்.
நிலத்தடி நீரை பயன்படுத்தி முடிந்த வரையிலும் சம்பா சாகுபடி தொடர்வதற்கு இலவச மின்சார இணைப்புகளை தடையின்றி வழங்க வேண்டும். 1.50 லட்சம் சிறப்பு ஒதுக்கீட்டில் வழங்கப்படும் மின் இணைப்புகள் கூட பல இடங்களில் உபகரணங்கள் தட்டுப்பாட்டால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
3 Al கட்டணம் செலுத்தியவர்கள் கூட மின் இணைப்பு பெற இயலாத நிலையில் தொடர்கிறது.
எனவே முன்னுரிமை கொடுத்து அனைவருக்கும் மின் இணைப்பு வழங்குவதோடு, நிலத்தடி நீரை பயன்படுத்த வாய்ப்புள்ள அனைத்து விவசாயிகளுக்கும் நிபந்தனை இல்லாமல் உடனடியாக இலவச மின் இணைப்பு சிறப்பு ஒதுக்கீட்டில் வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற முடியாத நிலையில் விவசாயிகள் பரிதவித்து வருகிறார்கள்.
கூட்டுறவு வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் என்கிற பெயரால் வங்கிகள் மூடப்பட்டுள்ளது. இதனை தமிழக அரசு விவசாயிகளுக்கு கடன் கொடுப்பதை தடுத்து நிறுத்தும் உள்நோக்கத்தோடு போராட்டத்தை பேச்சுவார்த்தை நடத்தாமல் காலம் கடத்தப்படுகிறதோ?. என்று அஞ்சத் தோன்றுகிறது. உடனடியாக கூட்டுறவு வங்கிகள் செயல்பட தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/tPQrk9ee57oWsJSi8R2V.jpeg)
கர்நாடக அரசு வலியுறுத்தியும் சட்டவிரோதமாக தண்ணீர் தர மறுப்பதை கண்டிக்காமல் தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் கொண்டு வந்துள்ள தீர்மானம் தமிழ்நாட்டிற்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.
உச்ச நீதிமன்றத்திலும் கர்நாடக அரசின் மீது வலிமையான எதிர் கருத்துக்களை முன்வைப்பதற்கான வகையில் சட்டமன்ற தீர்மானம் அமையாமல் போய்விட்டது என்கிற அச்சம் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
எனவே காவிரியில் தண்ணீரை தர மறுக்கும் கர்நாடக அரசிற்கு மின்சாரத்தை வழங்காதே, நெய்வேலி மின்சாரத்தை தடுத்து நிறுத்து, தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் மின்சாரம் தமிழ்நாட்டிற்கே என்கிற கோஷத்தை முன்வைத்து நெய்வேலி சுரங்கத்தை வரும் நவம்பர் 15-ஆம் தேதி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
இந்தப் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள், சுரங்க தொழிலாளர்கள் பங்கேற்க உள்ளனர்’, என்றார்..
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“