காவிரி மேலாண்மை வாரியம் : அதிமுக உண்ணாவிரதம் ஏப்.2-ல் இருந்து ஏப்.3-க்கு தள்ளிவைப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக அறிவித்த உண்ணாவிரதம் ஏப்ரல் 2-ல் இருந்து ஏப்ரல் 3-ம் தேதிக்கு மாற்றப்பட்டிருக்கிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக அறிவித்த உண்ணாவிரதம் ஏப்ரல் 2-ல் இருந்து ஏப்ரல் 3-ம் தேதிக்கு மாற்றப்பட்டிருக்கிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது தமிழ்நாட்டின் கோரிக்கை! காவிரி நடுவர் மன்றம் இதற்கான இறுதி உத்தரவை 2007-ம் ஆண்டே வழங்கியது. 2013-ம் ஆண்டு மத்திய அரசின் கெசட்டிலும் அந்த உத்தரவு வெளியிடப்பட்டுவிட்டது.

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தனது இறுதி தீர்ப்பை கடந்த பிப்ரவரி 16-ம் தேதி வெளியிட்டது. அதில் காவிரி மேலாண்மை வாரியம் என்கிற வார்த்தைகள் இல்லை என்றும் ‘ஸ்கீம்’ (செயல் திட்டம்) உருவாக்கவே கூறப்பட்டிருக்கிறது என்றும் கர்நாடகாவும் மத்திய நீர்வளத்துறையும் கூறி வருகின்றன.

காவிரி மேலாண்மை வாரியம்தான் அமைக்க வேண்டும் என்பது தமிழ்நாட்டின் நிலைப்பாடு! ஆனால் உச்ச நீதிமன்றம் நிர்ணயித்த 6 வார அவகாசத்தில் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மார்ச் 29-ம் தேதியுடன் அந்த அவகாசம் முடிந்துவிட்டது.

காவிரி மேலாண்மை வாரியத்திற்காக தற்போது தமிழ்நாட்டில் போராட்டம் வெடிக்கிறது. திமுக சார்பில் ஏப்ரல் 1-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற இருக்கிறது. அதில் போராட்டத் திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன. பாமக சார்பில் சென்னையில் நேற்று (மார்ச் 30) உழவர் அமைப்புகளை கூட்டி அன்புமணி ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். அதன் அடிப்படையில் ஏப்ரல் 11-ம் தேதி பந்த் அறிவித்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் ஆளும்கட்சியான அதிமுக சார்பில் ஏப்ரல் 2-ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதம் நடைபெறும் என மதுரையில் மார்ச் 30-ம் தேதி இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் அறிவித்தனர். ஆனால் அன்றே மாலையில் இந்த முடிவை மாற்றிக்கொண்டு ஏப்ரல் 3-ம் தேதி உண்ணாவிரதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஏப்ரல் 2-ம் தேதி வாரத்தின் முதல் வேலை நாள் என்பதால், போராட்டத்தை செவ்வாய் கிழமைக்கு மாற்றியதாக கூறப்படுகிறது. கட்சி அமைப்பு உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்டச் செயலாளர் தலைமையில் இந்த உண்ணாவிரதம் நடைபெறும் என இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

 

×Close
×Close