Advertisment

காவிரி பிரச்னை : எம்.ஜி.ஆர். பாடல்களுடன் நடந்த உண்ணாவிரதம், சென்னையில் இபிஎஸ், ஓபிஎஸ் பங்கேற்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வற்புறுத்தி இன்று தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களிலும் அதிமுக உண்ணாவிரதம் நடத்துகிறது. அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Cauvery Issue, Cauvery Case, AIADMK, ADMK Fasting

Cauvery Issue, Cauvery Case, AIADMK, ADMK Fasting

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வற்புறுத்தி இன்று தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களிலும் அதிமுக உண்ணாவிரதம் நடத்துகிறது. அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள்.

Advertisment

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வற்புறுத்தி தமிழ்நாட்டில் போராட்டம் வெடித்திருக்கிறது. ஆளும்கட்சியான அதிமுக சார்பில் மாவட்டம் தோறும் உண்ணாவிரதம் நடத்துகிறார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் யார், யார் தலைமையில் உண்ணாவிரதம் இருப்பது என்கிற பட்டியலை அதிமுக தலைமை ஏற்கனவே வெளியிட்டது.

காவிரி பிரச்னைக்காக அனைத்து விவசாய அமைப்புகளும் இணைந்து இன்று மறியல் நடத்துகின்றன. தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் இன்று கடையடைப்பும் நடக்கிறது. திமுக.வும் 3-வது நாளாக இன்று போராட்டங்களை நடத்துகிறது.

அதிமுக உண்ணாவிரதம் LIVE UPDATES

மாலை 3.15 : சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதத்தில் பங்கேற்க வந்த மாற்றுத் திறனாளி ஒருவரை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் எழுந்து கை கொடுத்து வரவேற்றனர். தமிழகம் முழுவதும் மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் இருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

மாலை 3.00 : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் புதுக்கோட்டையில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில், மதிய உணவு இடைவேளைக்காக அதிமுக.வினர் பலர் எழுந்து சென்றனர். இதனால் அப்போது உண்ணாவிரதப் பந்தல் வெறிச்சோடியது.

பிற்பகல் 2.00 : ‘காவிரி பிரச்னையில் மத்திய அரசை கண்டித்து நடைபெறும் உண்ணாவிரதத்தால், வரும் 9-ம் தேதிக்குள் நல்ல தீர்வு கிடைக்கும்’ என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.

பிற்பகல் 1.30 : சென்னையில் உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை நேரில் சந்தித்து  ஜெ.தீபாவின் கணவர் மாதவன் வாழ்த்து தெரிவித்தார்.

பகல் 12.45 : ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் எழுச்சி பூர்வமாக உண்ணாவிரதம் நடைபெறுகிறது. மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்கவே அதிமுக உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறது’ என உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி கூறினார்.

பகல் 11.30 : அதிமுக உண்ணாவிரதம் நடைபெறும் இடங்களில் எம்.ஜி.ஆர். பாடல்களைப் போட்டு ஆட்டம்-பாட்டத்துடன் உண்ணாவிரதம் நடக்கிறது. அமைச்சர்களின் முயற்சியைத் தாண்டி, எம்.ஜி.ஆர். பாடல்களுக்கும் தொண்டர்களை இழுக்கும் சக்தி இருப்பதை பார்க்க முடிந்தது.

காலை 10.15 : ‘மக்களின் உணர்வுக்கு மதிப்பளிப்பது அதிமுக மட்டுமே என்பதற்கு இந்த உண்ணாவிரதம் ஒரு உதாரணம்’ என மதுரை உண்ணாவிரதப் பந்தலில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி அளித்தார்.

காலை 10.00 : மதுரையில் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, நாகையில் ஓ.எஸ்.மணியன், திருச்சியில் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் உண்ணாவிரதம் நடக்கிறது. ஈரோட்டில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன், திருவாரூரில் காமராஜ், நாமக்கல்லில் தங்கமணி, கடலூரில் எம்.சி.சம்பத் தலைமையில் உண்ணாவிரதம் நடந்துகொண்டிருக்கிறது.

காலை 9.30 : சாமியார்கள் ஆசி : காவிரி பிரச்னைக்காக பாண்டிச்சேரி புதிய பேருந்து நிலையம் அருகே அதிமுக உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்று வருகிறது. அப்போது போராட்டப் பந்தலுக்குள் நுழைந்த 2 சாமியார்கள், அங்கிருந்த அதிமுகவினருக்கு நெற்றியில் விபூதி பூசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Cauvery Issue, Cauvery Case, AIADMK, ADMK Fasting சேப்பாக்கம் உண்ணாவிரதத்தில் கலந்துகொண்ட அதிமுக.வினர்

காலை 9.15 : ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, அதிமுக நடத்தும் உண்ணாவிரதம் வெற்றி பெறும்’ என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

காலை 9.00 : சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் உண்ணாவிரதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காலையிலேயே வந்து கலந்து கொண்டார். அவரைத் தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் வந்தார். இருவரும் பங்கேற்பதாக முன்னதாக அறிவிக்காமல், சஸ்பென்ஸாக கலந்து கொண்டதால் நிர்வாகிகள் உற்சாகம் அடைந்தனர்.

காலை 7.55 : சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதத்திற்கு பிரமாண்ட பந்தல் போடப்பட்டிருக்கிறது. சேப்பாக்கம் ஸ்டேடியம் அருகேயுள்ள சிக்னல் பகுதியில் இருந்து மெரினா செல்லும் நேர் பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருக்கிறது.

Cauvery Management Board, AIADMK Fasting LIVE UPDATES சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதத்திற்கு பிரமாண்ட பந்தல்

காலை 7.45 : சீனியர் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், சி.வி.சண்முகம், தங்கமணி, வேலுமணி ஆகியோர் அவரவர் மாவட்டங்களில் நடைபெறும் உண்ணாவிரதத்திற்கு தலைமை தாங்குகிறார்கள்.

காலை 7.40 : சென்னையில் சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், அமைச்சர் ஜெயகுமார், அமைப்புச் செயலாளர் கோகுல இந்திரா, மாவட்டச் செயலாளர்கள் விருகை ரவி, தி.நகர் அசோக், பாலகங்கா, வெங்கடேஷ்பாபு எம்.பி. ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோர் தலைமையில் உண்ணாவிரதம் நடக்கிறது.

இதேபோல ஒவ்வொரு மாவட்டத்திலும் தலைமை அறிவித்த நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் தலைமை தாங்குகிறார்கள்.

காலை 7.30 : தமிழ்நாட்டின் வருவாய்த் துறை ரீதியிலான 32 மாவட்டங்கள், பாண்டிச்சேரி, காரைக்கால் என மொத்தம் 34 இடங்களில் அதிமுக இன்று உண்ணாவிரதம் நடத்துகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சியின் வலிமையை நிரூபிக்கும் வகையில் உண்ணாவிரதம் பிரமாண்டமாக அமைய வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி க.பழனிசாமி ஆகியோர் உத்தரவிட்டிருக்கிறார்கள்.

 

 

O Panneerselvam Edappadi K Palaniswami Cauvery Management Board
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment