காவிரி போராட்டத்தில் பங்கேற்போர் பட்டியலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் பெயர்கள் இல்லை. இது ஜெயலலிதா வழியா?
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த கெடு, மார்ச் 29-ம் தேதியுடன் முடிந்தது. இதைத் தொடர்ந்து காவிரி பிரச்னையில் ஒவ்வொரு கட்சியும் போராட வேண்டிய கட்டாயச் சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கின்றன.
காவிரி மேலாண்மை வாரியம் அமையும் என கடைசி நிமிடம் வரை அதிமுக தரப்பில் நம்பிக்கையுடன் கூறி வந்தனர். ஆனால் எதுவும் நடக்கவில்லை. எனவே அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக நேற்று (மார்ச் 30) ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பதிவில், ‘காவிரி பிரச்னைக்காக தமிழ்நாடு முழுவதும் உண்ணாவிரதம்’ என குறிப்பிட்டிருந்தார். அதில், ‘மத்திய அரசைக் கண்டித்து’ என்கிற வார்த்தைகள் இல்லை.
காவிரி மேலாண்மை வாரியத்தை வலியுறுத்தி ஏப்ரல் 3-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் வருவாய் மாவட்ட தலைநகரங்களில் நடைபெற இருக்கும் உண்ணாவிரதத்தை விளக்கி இன்று அதிமுக சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ‘இந்திய உச்ச நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் தமிழக மக்களுக்கும் இந்திய நீதித்துறைக்கும் மாபெரும் துரோகம் இழைத்த மத்திய அரசின் வேதனையளிக்கும் நடவடிக்கையை கண்டித்து’ என்கிற வாசகம் வருகிறது.
வழக்கமாக அதிமுக சார்பிலான அறிக்கைகளை ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமியும் கையெழுத்திட்டு வெளியிடுவார்கள். ஆனால் மத்திய அரசை கண்டித்த இந்த அறிக்கையில் இருவரின் கையெழுத்தும் இல்லை. தலைமைக் கழகத்தின் முத்திரையை இட்டு, தலைமைக் கழகத்தின் அறிக்கையாக இதை வெளியிட்டிருக்கிறார்கள். இரு தினங்களுக்கு முன்பு கிட்டத்தட்ட இதே நிர்வாகிகளை சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு கூட்டுறவு தேர்தல் பொறுப்பாளர்களாக நியமித்து ஒரு அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பை இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் கையெழுத்திட்டு அறிக்கையாக விட்டது குறிப்பிடத்தக்கது.
காவிரி பிரச்னையில் முதல்வராக இருந்தபோதே மத்திய அரசை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்த வரலாறு ஜெயலலிதாவுக்கு உண்டு. ஆனால் இபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவருமே இந்த உண்ணாவிரதத்தில் நேரடியாக பங்கேற்கவில்லை. அதிமுக தலைமைக்கழகம் சார்பில் வெளியான மாவட்டம் வாரியாக தலைமை தாங்குவோர் பட்டியலில் இருவரின் பெயர்களும் இல்லை.
அமைச்சர்கள் பலர் அவரவர் சார்ந்த மாவட்டத்தில் உண்ணாவிரதத்திற்கு தலைமை தாங்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார்கள். ஆனால் எந்த மாவட்டத்திலும் யாரும் தனி ஆளாக தலைமை தாங்கும் வாய்ப்பை பெறவில்லை. உதாரணத்திற்கு சென்னை மாவட்டத்தில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், அமைச்சர் ஜெயகுமார், அமைப்புச் செயலாளர் கோகுல இந்திரா, மாவட்டச் செயலாளர்கள் பாலகங்கா, விருகை ரவி, தி.நகர் சத்யா, டி.ஜி.வெங்கடேஷ் பாபு, ஆர்.எஸ்.ராஜேஷ் என 8 பேர் தலைமை தாங்குகிறார்கள். அதிமுக.வில் கூட்டுத் தலைமை என்ற அடிப்படையில் மாவட்ட வாரியாக நடைபெறும் போராட்டங்களிலும் அந்த நிலை தொடர்கிறது.
சென்னையில் ஓபிஎஸ் ஆதரவாளரான மதுசூதனன் பெயர் முதலிடத்தில் இருப்பதுபோல பல மாவட்டங்களில் ஓபிஎஸ் அணியினரின் ஆதிக்கம் இருக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் சீனியரான அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பெயர் முதலிடத்தில் வருகிறது. எனவே அதே மாவட்டத்தை சேர்ந்த தனது ஆதரவாளரான நத்தம் விஸ்வநாதனை தனது சொந்த மாவட்டமான தேனியில் நடைபெறும் உண்ணாவிரதத்திற்கு தலைமை தாங்க வைத்திருக்கிறார் ஓபிஎஸ். இங்கு நத்தம் விஸ்வநாதனுடன் தலைமைப் பொறுப்பை பங்கு போடுகிற மற்றொருவரும் ஓபிஎஸ் ஆதரவாளரான மாவட்டச் செயலாளர் சையதுகான்!
கடலூர் மாவட்டத்திற்கு ஓபிஎஸ் ஆதரவாளரான செம்மலை பெயர் முதலிடத்திலும், அமைச்சர் எம்.சி.சம்பத் பெயர் இரண்டாம் இடத்திலும் வருகின்றன. ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைச்சர் மணிகண்டன் பெயரைவிட முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் பெயர் முந்தி நிற்கிறது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்திற்கு ஓபிஎஸ் ஆதரவாளரான பொன்னையன் தலைமை தாங்க அனுப்பப்படுகிறார். முக்கியத்துவம் வாய்ந்த திருச்சி மாவட்டத்திற்கு கே.பி.முனுசாமி தலைமைப் பொறுப்பை ஏற்கிறார். திருநெல்வேலியில் மனோஜ்பாண்டியன் பெயரும், திருவள்ளூரில் ஜே.சி.டி.பிரபாகரன் பெயரும் முதலிடத்தில் வருகின்றன.
கே.ஏ.செங்கோட்டையன்(ஈரோடு), தங்கமணி (நாமக்கல்), எஸ்.பி.வேலுமணி (கோவை), சி.வி.சண்முகம்(விழுப்புரம்) என இபிஎஸ் அணி சீனியர் அமைச்சர்கள் அவரவர் மாவட்டத்தில் முதலிடம் பெறுகிறார்கள். தஞ்சாவூர் வைத்திலிங்கம் மற்றும் மாவட்டச் செயலாளர்களாக இருக்கும் எம்.பி.க்களைத் தவிர வேறு யாரும் தலைமை ஏற்போர் பட்டியலில் இடம் பெறவில்லை. இபிஎஸ் அணியில் முன்னாள் அமைச்சர் வளர்மதி மட்டுமே மாவட்டம் கடந்து திருவாரூருக்கு தலைமை தாங்க அனுப்பப்படுகிறார்.
கொஞ்சம் கொஞ்சமாக ஓபிஎஸ் தனது பிடியை கட்சியில் வலுவாக்கி வருவதை இந்தப் பட்டியல் உணர்த்துகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.