காவிரி சிக்கலில் #CSK : 10-ம் தேதி சென்னையில் ஐ.பி.எல். நடக்குமா?

உயிர் பிரச்னையான காவிரிக்காக போராட்டம் நடந்து கொண்டிருக்கும் வேளையில் ஐபிஎல் கொண்டாட்டங்கள் அவசியமா? என சில அமைப்புகள் கேள்வி எழுப்பியிருக்கின்றன.

காவிரி சிக்கல் காரணமாக இரு ஆண்டு இடைவெளிக்கு பிறகு சென்னையில் முதன்முதலாக சி.எஸ்.கே. மோதும் போட்டி நடைபெறுமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழ்நாட்டில் போராட்டங்கள் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. சென்னையில் பிரதான போராட்டக் களமாக சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகேயுள்ள திடல் அமைந்திருக்கிறது. ஏப்ரல் 3-ம் தேதி அதிமுக.வும், ஏப்ரல் 4-ம் தேதி திமுக.வும் இங்கு உண்ணாவிரதம் இருந்தன.

சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகேயே எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் ஸ்டேடியம் இருக்கிறது. இங்குதான் அடுத்த இரு மாதங்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதும் பெரும்பாலான ஐ.பி.எல். போட்டிகள் நடைபெற உள்ளன. விவசாயிகளின் உயிர் பிரச்னையான காவிரிக்காக போராட்டம் நடந்து கொண்டிருக்கும் வேளையில் ஐபிஎல் கொண்டாட்டங்கள் அவசியமா? என சில அமைப்புகள் கேள்வி எழுப்பியிருக்கின்றன.

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் இது தொடர்பாக கூறியிருப்பதாவது : தமிழ்நாட்டில் தன்னெழுச்சியான போராட்டங்களை மடைமாற்றவும் மழுங்கடிக்கவும் தனக்கே உரிய தந்திரோபாயங்களைக் கையாளுகிறது மோடி அரசு. அந்த தந்திரோபாயங்களில் இந்திய கிரிக்கெட் வாரியமும் சிக்கிவிடக்கூடும் என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியல்லை.

ஆம், வரும் 10.04.2018 அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடக்க இருக்கிறது என்ற தகவல்தான் இந்த சந்தேகத்திற்கான அறிகுறி. இன்றைய காலத்தில் ஒப்பீட்டளவில் சினிமாவும் கிரிக்கெட்டும்தான் ஆற்றல்மிகு ஊடகங்களாக உள்ளன. அதிலும் கிரிக்கெட் பேராற்றலுடையது!

அப்படியிருக்க, ஆட்சியாளர்கள் போராட்டங்களின்பால் மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப பேராற்றலுடைய கிரிக்கெட் ஊடகத்தினைப் பயன்படுத்திக்கொள்ளாமல் எப்படி? எனவேதான் அத்தகைய சூழ்ச்சிக்கு இந்திய கிரிக்கெட் வாரியமும் ஐபிஎல் நிர்வாகமும் இரையாகிவிடக் கூடாது என்று எண்ணுகிறோம்.

ஆகையால் வரும் 10.04.2018 அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இல்லை என்கிறபடிதான் தங்களின் நிகழ்ச்சி நிரல் அமைக்கப்படும் என்று நம்புகிறோம். தப்பித் தவறி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு 10.04.2018 தேதியைத் தேர்வு செய்திருந்தால், தயைகூர்ந்து இந்திய கிரிக்கெட் வாரியமும் ஐபிஎல் நிர்வாகமும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை, அதனை வேறு மாநிலத்திற்கு அல்லது வேறு தேதிக்கு தள்ளிவைக்க ஆவன செய்ய வேண்டுமென்று போராட்ட களத்தில் பங்கேற்றுள்ள தமிழக மக்கள் மற்றும் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு, காவிரி உரிமை மீட்பு குழு, மற்றும் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு, சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்.

அதுவே தங்கள் வாழ்வுரிமைக்காகவும் எதிர்கால தங்கள் சந்ததிகளின் நலனுக்காகவும் போராடிக்கொண்டிருக்கும் தமிழக மக்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் செய்யும் கைமாறாக இருக்கும். அதேநேரம் நாங்கள் கிரிக்கெட்டுக்கோ இந்திய கிரிக்கெட் வாரியத்துகோ, கிரிக்கெட் ரசிகர்களுக்கோ, ஒருபோதும் எதிரானவர்கள் இல்லை என்பதை உள்ளன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

குறிப்பு – கிரிக்கெட் வாரியத்தால் எங்கள் நிமாயமான கோரிக்கை புறந்தள்ளப்ட்டால், கிரிக்கெட் ரசிகர்களாகிய நீங்கள் இந்த கிரிக்கெட் போட்டியை முற்றாக புறக்கனித்து மைதானத்தின் இருக்கைகள் முழுவதும் வெறிச்சோடியிருக்க செய்ய வேண்டுமென்று, போராடும் விவசாய மக்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறியிருக்கிறார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜேம்ஸ் வசந்தனும் அன்று ஒருநாள் கிரிக்கெட் ரசிகர்கள் நேரில் சென்று கிரிக்கெட் பார்ப்பதை தவிர்த்தால், காவிரி பிரச்னையின் தீவிரத்தை உலகம் முழுவதும் எடுத்துச் செல்ல முடியும் என வேண்டுகோள் வைத்திருக்கிறார். இதேபோல பல்வேறு தமிழ் அமைப்புகளும் ஐ.பி.எல். போட்டிகளுக்கு எதிராக கொடி பிடிக்க ஆரம்பித்திருக்கின்றன. சென்னையில் ஏப்.10-ல் ஐபிஎல் போட்டி நடைபெற்றால் கிரிக்கெட் வீரர்களை சிறைபிடிப்போம் மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவரும் எம்.எல்.ஏ.வுமான தமிமுன் அன்சாரி கூறியிருப்பதும் முக்கியத்துவம் பெறுகிறது.

காவிரி பிரச்னையில் போராட்டங்கள் உக்கிரமாக நடந்து வருவதால், போட்டியை இங்கு நடத்துவது குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் ஐபிஎல் நிர்வாகம் ஆகியன மறு பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது. வீரர்கள் மற்றும் ரசிகர்களின் பாதுகாப்பு, பொதுமக்களின் உணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் ஐபிஎல் நிர்வாகம் முடிவெடுக்கும் என கிரிக்கெட் சங்க வட்டாரங்கள் கூறுகின்றன.

 

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close